தலைமைத்துவமும் முன் வைத்தல் நுட்பமும்
ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின்படி ஆசிரியர்களின் வினைத்திறன் தடை தாண்டல் இதவடிவம் - 04
01. தலைமைத்துவம் (Leadership)02. முன்வைப்புத் திறன்கள் (Presentation Skills)
01. தலைமைத்துவம்.
தலைமைத்துவம் அறிமுகம்.
நபரொருவர், மற்றையோரின் சிந்தனைகள், மனப்பாங்குகள் மற்றும் நடத்தைகளைச் செல்வாக்குக்கு உட்படுத்தும் நடைமுறையொன்றே தலைமைத்துவமாகும். இது பொதுவான பணிகளை நிறைவேற்றுவதற்கு மற்றையோரின் ஆதரவுகளையும் உதவிகளையும் ஒருவரால் நிரற்படுத்தக் கூடியதாகவுள்ள சமூகச் செல்வாக்கு நடை முறையொன்றாகும். அசாதாரணமான ஒன்று நிறைவேற்றப்படுவதற்கு மக்கள் பங்களிக்கத்தக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் தலைமைத்துவம் ஆகும்.
தலைவர்கள், தம்முடன் பணியாற்றுவோருக்கான திசையமர்வினை ஏற்படுத்துவர், அவர்களால் அடையப்படக்கூடியது என்ன என்பதனைக் காட்சிப்படுத்துவர், அத்துடன் அவர்களை ஊக்குவித்து உணர்வூட்டுவர். தலைமைத்துவம் இல்லாதவிடத்து குழுவாயமைந்த மனிதர்கள் விரைவாகச் சீர்கெட்டு வாக்குவாதங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாவர், ஏனெனில் அவர்கள் விட யங்களை வெவ்வேறு வழிகளில் நோக்குவதுடன் வெவ்வேறு திசைகளிற் செல்வதற்கு முனைவர்.
தலைமைத்துவமானது, அவர்களை ஒரேதிசையில் இயங்கவைத்து அவர்களது ஒன்றிணைந்த முயற்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தலைமைத்துவமானது மற்றவர்களைக் கொண்டு மிகச்சிறப்பான ஒன்றினைச் செயற்படுத்தும் ஆற்றலாவதுடன் தலைமைத்துவமின்றி அவர்களாற் செயற்பட இயலாது போயிருக்கலாம்.
இலக்கு ஒன்றினை நோக்கி மக்களுக்குச் சக்தியளிப்பதை இது உட்கொண்டுள்ளது. எமது நாளாந்த வாழ்க்கை முறையினையும் எதிர்காலத்தினையும் தலைவர்கள் ஏற்ற முடையதாக்குகின்றனர். நல்ல நிலையிலும் கெட்ட நிலையிலும் பலமான தலைமைத்துவத்திற்கான தேவை எப்போதும் உள்ளது.
வியாபாரம் அல்லது உற்பத்தித் தொழில் அல்லது பாடசாலை முறைமை ஒன்றின் வெற்றியானது அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அல்லது மரபுவழியாக அமைந்த தலைவர்களினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
மனிதனின் சகல அசைவியக்கங்களிலும் தலைவர் (அரசன்) செல்வாக்கு செலுத்துகிறார். ஓவ்வோர் இடத்திலும் அவர் இருக்க வேண்டியது தவிர்க முடியாதது. எதிரிகள் நல்லதொரு தலைவரால் வழிநடத்தப்படும் போது தலைவர் இல்லாத மற்றப்படைக்கு என்ன நடக்கும் என்பதற்கு இந்த யுத்தம் சாட்சி சொல்கிறது.
புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரியரான தோமஸ் கார்லைல் அவர்களின் இக்கூற்றானது மனித வாழ்க்கையில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தனை கோடிட்டுக் காட்டுகின்றது.
தேசங்களை மாத்திரமல்லாது சமூகங்களையும், நிறுவனங்களையும், குடும்பங்களையும் கட்டியெழுப்பவும் பாதுகாத்து வழிநடத்தவும் தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.
அரசியல் மட்டுமல்லாது சமயம், மருத்துவம், விஞ்ஞானம், விளையாட்டு, இசை, கலை, இலக்கியம் முதலான எல்லாத்துறைகளிலுமே தலைவர்கள் அவசியமாக இருக்கிறார்கள்.
மனிதர்கள் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்திலும் அவர்களைப் பாதுகாக்கவும் வழிநடத்தவும் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
பின்னர் தோன்றிய ஆண்டான் அடிமை சமூகத்திலும், மானிய முறை சமூகத்திலும் கூட தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
மனித வரலாறு என்பதே ஒருவகையில் பார்த்தால் அரசியல், இராணுவ, சமய, சமூக, தலைவர்களின் வரலாறாகவே இருக்கிறது.
உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய புராண, இதிகாசங்கள் மற்றும் பண்டைய இலக்கியங்கள் தலைவர்களின் புகழ் பாடுவனவாகவே இருக்கின்றன.
தலைமைத்துவம் பற்றிய சில வரைவிலக்கணங்கள்
Drucker
'அவரைப் பின்பற்றுவோர் உள்ள ஒருவர் என்பதே தலைவருக்கான ஒரேயொரு வரைவிலக் கணமாகும். தனிப்பட்ட தொலைநோக்கினை மேலான உரிமைகளுக்கு உயர்த்துதல், நபரொருவரின் செயலாற்றலை உயர் தரத்திற்கு மேம்படுத்துதல், சாதாரண எல்லைகளுக்கு மேலாக ஆளுமையினைக் கட்டியெழுப்பதல் என்பது தலைமைத்துவமாகும்".
John C Maxwell
"தலைமைத்துவம் என்பது செல்வாக்குச் செலுத்துதல் இன்றி வேறொன்றுமல்ல"
Roman Catholic Diocese of Rochester
"குழும இலக்குகளை நோக்கிய மக்களின் நடத்தையினை, அவர்களது சுதந்திரத்தை முழு மையாக மதிக்கும் வகையில், செல்வாக்குச் செலுத்துகின்ற வழிமுறையாகும்.
Warren Bennis
"தலைமைத்துவம் என்பது, உங்களை நீங்கள் உணர்ந்து கொள்கின்ற, நன்கு தொடர்பாடல் செய்யப்பட்ட தொலை நோக்கினைக் கொண்ட, கூட்டாளிகளிடையே நம்பிக்கையினை வளர்க்கின்ற. உங்களது இயல்பாற்றல்களைத் தெளிவாய் அறிந்து கொள்வதற்கு விளைதிறனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய. தொழிற்பாடு ஒன்றாகும்".
Tennenbaun
"தலைமைத்துவம் என்பது. இலக்குகளை அடையுமுகமாக, நபர்களுக்கிடையிலான செல்வாக்குச் செலுத்தலை வேண்டிய சந்தர்ப்பத்திற் செயற்படுத்தி, தொடர்பாடல் நடைமுறையினூடாக வழிநடத்துவதாகும்”.
Fred E. Fiedler
"அறிவுரை வழங்கல், முரண்பாடுகளைக் கையாளுதல், விசுவாசத்தினைத் தூண்டுதல், அடுத்த படிநிலையிலுள்ள பணியாளர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்திருக்க ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான ஆற்றலை தலைமைத்துவம் உட்கொண்டுள்ளது".
American former President H. Truman
"மக்கள் செய்வதற்கு விரும்பாதவற்றை அல்லது செய்வதற்குச் சோம்பற்படுகின்றவற்றை செய்யத்தக்கதாக மக்களை இணங்க வைக்கின்ற ஒருவர் தலைவராவர்”.
Business Dictionary
நிறுவனமொன்றின் சூழமைவில் தலைமைத்துவம் என்பது,
(அ) தெளிவான தொலைநோக்கினை நிலைநாட்டுதல்,
(ஆ) அத்தொலைநோக்கினை மற்றையோர் மனவிருப்பத்துடன் பின்பற்றக்கூடிய வகையில் அவர்களுடன் பகிர்தல் அல்லது தொடர்பாடுதல்,
(இ) தொலைநோக்கினைத் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கான தகவல், அறிவு மற்றும் வழிமுறைகளை வழங்குதல்,
(ஈ) உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவரதும் முரண்பாடான ஆர்வங்களை இணைப்புச் செய்தல் அத்துடன் சமநிலை பேணுதல் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது. மக்கள் மூலமாகப் பணியினைச் செய்துமுடித்தல் என்பதே தலைமைத்துவத்திற்கான சிறந்த வரைவிலக்கணமாகும்.
Scott D.Thompson
மக்கள் மூலமாகப் பணியினைச் செய்துமுடித்தல் என்பதே தலைமைத்துவத்திற்கான சிறந்த வரைவிலக்கணமாகும்.
Albert & Khedoorn
அமைப்பொன்றின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகத் தனிநபர்கள் அல்லது குழுவின் நடத்தைகளில் அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் தலைமைத்துவமாகும்.
Stoner & Freeman
"குழு அங்கத்தவர்களின் தொழில்களுடன் தொடர்புடைய கருமங்களில் வழிகாட்டல்களையும் மற்றும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடிய செயன்முறை தலைமைத்துவமாகும்."
பாடசாலையும் தலைமைத்துவமும்
இணக்கப்பாட்டினைத் தூண்டும் வழியொன்றாக, ஆளுமையின் அளவுகோலொன்றாக, இசைவிக்கும் வகையொன்றாக, ஈடுபாடுள்ள அமைப்பு முறையின் விளைவொன்றாக, அதிகார உறவுமுறைகளுக்கிடையில் பேரம்பேசுதல் அல்லது நடந்துகொள்ளும் முறையொன்றாக எண்ணப்படுகின்றது.
தலைமைத்துவத்தினை வரைவிலக்கணப்படுத்தும் போது பல சொற்களும் சொற்றொடர்களும் முன்னிற்கின்றன. நோக்கம், தனிநபர்கள், செல்திசை, குழுக்கள், கலாசாரமும் பெறுமானங்களும், பகிர்ந்துகொள்ளப்பட்ட செயலுபாயத் தொலைநோக்கு, முன்னுரிமைகள் மற்றும் மாற்றத்தினைத் திட்டமிடல். இவ்வரைவிலக்கணங்கள் யாவும் பின்வருவனவற்றை வலியுறுத்துகின்றன: (ரிச்சார்ட்ஸ் மற்றும் எங்கிள், 1986) தலைமைத்துவம் என்பது :
- நோக்கத்தைக்கொண்ட நடத்தை.
- பிறரை வழிநடத்தல் அல்லது செல்வாக்குக்குட்படுத்தல்.
- ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட இலக்குகளை அடைதல்.
ஆகியவற்றைக்கொண்ட வழிமுறையொன்றாகும்.
மேற்கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் யாவும் பல்வேறு முடிவுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன:
- தலைமைத்துவம் ஏற்படுவதாயின் அல்லது தொழிற்படுவதாயின் எவரோ பின்பற்றுவதைப் புலப்படுத்துகின்றது. வெறுமையான அறை ஒன்றினுள் தலைவர்கள் வழிநடத்த இயலாது.
- தலைமைத்துவமானது நோக்கத்தையும் செல்லும் திசையையும் உடையதாகும். நோக்கமின்றி அது அசைவதில்லை.
தலைமைத்துவத்தின் செல்திசை எப்போதும் முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். மிகஅவசியமானது எதுவோ அதனைத் தேடிச்செல்வதற்குச் சிலவேளைகளில் நல்லவைகளைக்கூட புறந்தள்ளிவிட நேரிடும்.
- சிறப்பு வாய்ந்த தலைமைத்துவம் மாற்றத்தினை விளைவிக்கும்.
- விளைதிறனுள்ள தலைமைத்துவம், நிறுவனத்தின் பங்குதாரர்களது கருத்துக்களை ஒருங்கிணைப்பதிற் தங்கியிருக்கும்.
பொழிப்புக்கூறின், பாடசாலைத் தலைமைத்துவம் என்பது மாணவரது, கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புள்ள தேவைகளுக்காக, அதிசிறந்த திறன்களுடனும் ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றுமுகமாக பிறரை அணிதிரட்டி வலுவளிக்கும் ஒரு செயற்பாடாகும்.
தலைமைத்துவம் என்பது தனிநபர் ஒருவரது நடத்தை பகிரப்பட்ட இலக்கு ஒன்றினை நோக்கி குழுவினரது செயற்பாடுகளை நடத்திச் செல்லுதலாகும் (Hemphill & Coons, 1957).
சேவகன் தலைவர் எனும் போது சேவகன் முதலில் ஒருவர் சேவை செய்ய விரும்புகிறார் எனும் இயற்கையுணர்வுடன் இது ஆரம்பிக்கிறது. பின்னர் உணர்வு பூர்வமான தெரிவு ஒரு வரை வழிநடத்துவதற்கு ஆவலுள்ளவராக்குகின்றது (Greenleaf, 1970).
தலைமைத்துவம் என்பது, இலக்கினை அடைவதனை நோக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரது செயற்பாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் வழிமுறை ஒன்றாகும் (Rauch & Beh ling, 1984).
தலைமைத்துவம் என்பது, ஒன்றுதிரண்ட முயற்சிக்கான நோக்கத்தினை (அர்த்தமுள்ள செல்திசையினை) வழங்குகின்றதும் அத்துடன் நோக்கத்தினை நிறைவேற்றுதற்கு வழங்கப்படவுள்ள சுயவிருப்புடனான முயற்சியினைத் தோற்றுவிக்கின்றதுமான வழிமுறை ஒன்றாகும் (Ja cobs & Jaques, 1990).
தலைமைத்துவம் என்பது, தொலைநோக்குகளைத் தெளிவாகக் குறிப்பிடல், பெறுமானங்களை உள்ளடக்கல், விடயங்கள் அடையப்படத்தக்கதான சூழலை உருவாக்குதல் பற்றியதாகும்.
தலைமைத்துவத்தின் முக்கியத்துவம்
செயல்பாட்டை முன்னெடுத்தல் :
தலைவரானவர், தொலைநோக்கு, கொள்கைகள் மற்றும் திட்டங்களை சக ஊழியர்க்குத் தெரிவித்து செயற்பாடு உண்மையில் எங்கே ஆரம்பிக்கிறது என்பதனையும் அவர்களுடன் கலந்துரையாடி தனது பணியினை ஆரம்பிக்கும் ஒருவராவார்.
ஊக்குவித்தல்
தலைவரொருவர் நிறுவனத்தினுள் ஊக்குவிப்புக்கள் வழங்குனர் எனும் பாத்திரத்தை வகிப் பவர் என்பதனை நிரூபிப்பவராவர். பணமல்லாத வெகுமதிகளை வழங்குதன் மூலம் ஆசிரி யர்களை இவர் ஊக்குவித்து இதன் மூலம் இவரின் கீழ் பணியாற்றுவோரைச் செயலாற்ற வைப்பர்.
வழிகாட்டலை வழங்குதல்
அதிபரானவர் ஆசிரியர்களின் பணியினை மேற்பார்வை செய்யவேண்டியது மாத்திரமல்ல அத்துடன் ஆசிரியருக்கான வழிகாட்டற் பங்கினை வகிக்கவேண்டியவருமாவர். அதாவது அவர்களது கற்பித்தற் பணிகளை வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகளை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவேண்டியவர்.
தன்னம்பிக்கையினை உருவாக்குதல்
தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானதொரு காரணியாகும். ஆசிரியர்களுக்கு செயற்பாட்டு முயற்சிகளைத் தெரிவிப்பது, அவர்களது வகிபாகத்தினைத் தெளிவாக விபரிப்பது, மற்றும் இலக்குகளை விளைதிறனுடன் அடைவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியவற்றினூடாக இது எய்தப்படலாம். மேலும் அவர்களது தேவைகள், முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிதலும் முக்கியமானதாகும்.
மனவுறுதியினைக் கட்டியெழுப்புதல்
ஆசிரியர்களது பணியினை நோக்கிய மனமுவந்த ஒத்துழைப்பினையும், அவர்களைத் தன்னம்பிக்கையுள்ளவர்களாக்குவதிலும் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாவதையும் மனவுறுதி குறிப்பிடுகின்றது. இலக்குகளை அடைவதற்குச் செயற்படுகையில் அவர்கள் தமது மிகச்சிறந்த செயலாற்றல்களுடன் பணியாற்றத்தக்கதான முழுமையான ஒத்துழைப்பினைப் பெறுகையில் தலைவரானவர் மனவுறுதியினைப் பெருக்குபவராகிறார்.
பணிச்சூழலை அமைத்தல்
முகாமைத்துவம் என்பது மக்கள் மூலம் விடயங்களை நடத்தி முடித்தல் என்பதாகும். வினைத்திறனுள்ள பணிச்சூழல் உறுதியான நிலைபேறான வளர்ச்சிக்கு உதவுகின்றது. எனவே மனித உறவுகள் தலைவரினால் அவர்களது மனதில் பதிக்கப்படல் வேண்டும். ஆசிரியர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை இவர்கள் வைத்திருப்பதுடன் அவர்களது பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து அவற்றைத் தீர்ப்பதற்கு உதவுதல் வேண்டும்.
இணைப்புச் செய்தல்
தனிப்பட்ட ஆர்வங்களை நிறுவன இலக்குகளுடன் நல்லிணக்கம் செய்வதனூடாக இணைப்புச்சேவை எய்தப்படுகிறது. இவ்வொத்திசைவானது உகந்ததும் விளைதிறனுள்ளதுமான இணைப்புச் சேவையினூடாகப் பெறப்படக்கூடும் என்பதுடன் இது தலைவரினது பிரதான உள்ளெண்ணமாக இருத்தல் வேண்டும்.
பாடசாலைகளில் தலைமைத்துவத்திற்கான தேவை
தலைமைத்துவமானது, ஆசிரியர்களின் ஊக்குவிப்பிலும் அவர்களது செலாற்றல் விருத்தியிலும் அத்துடன் அவர்கள் பணி புரிகின்ற பாடசாலைச் சுற்றுச்சூழலிலும் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் பாடசாலையின் வெளியிடுகையினையும் மற்றும் கல்வியின் தரத்தினையும் மேம்படுத்தும் பிரதான பங்கினை வகிக்கின்றது. இன்னொரு வகையிற் கூறின், பாடசாலைக் கல்வியின் வினைத்திறன், நடுநிலைமையினையும் மேம்படுத்துதலுக்கு பாடசாலைத் தலைமைத்துவமானது அவசியமாகிறது.
பாடசாலைத் தலைமைத்துவமானது, பொதுவான கல்விக் குறிக்கோள்களை அடையும் முகமாக ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோரது திறமைகளையும் சக்திகளையும் பட்டியலிட்டு வழிநடத்தும் நடைமுறையாகும்.
அமைப்பின் தூர நோக்கு, இலட்சிய நோக்கு, குறிக்கோள், நோக்கு என்பவற்றினைச் சிறப்பாக அடைந்து கொள்வதற்குச் சகலரினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு. உயர் செயற்பாட்டு அடைவினை அடைந்து கொள்வதற்காக ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்கு. பல்வேறு துறைகளிலும் கருமமாற்றுகின்ற ஊழியர்களின் கருமங்களில் ஒன்றிணைப்பை ஏற்படுத்துவதற்கும், வழிகாட்டலுக்கும், அமைப்பின் பல்வேறு துறைகளிடையே தொடர்பாடலைப் பேணுவதற்கு தேவையான நியமங்களுக்கேற்ப அமைப்பின் கருமங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாளர்களின் தன்னம்பிக்கையினையும் மனோபலத்தையும் உறுதிப்படுத்துவதற்கும் அவசியமாகிறது.
பாடசாலைத் தலைவர்களிடம் அமைந்திருக்கவேண்டிய திறன்கள்
- அறிவுறுத்தல்கள் வழங்கும் தலைமைத்துவத் திறன்கள்.
- முகாமைத்துவத் திறன்கள்.
- தொடர்பாடல், கூட்டுச் செயற்பாடு மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புதல்.
- தொலைநோக்கினை விருத்திசெய்தல், அபாயத்தினை எதிர்கொள்ளல் மற்றும் மாற்றங்களின் முகாமைத்துவம்.
- முரண்பாட்டுநிலை முகாமைத்துவத் திறன்கள்.
சிறந்த தலைவரொருவரிடம் இருக்கவேண்டிய தலைமைத்துவப் பண்புகள்
- உன்னிப்பாக செவிமடுத்தல்.
- உறுதியாக வெளிப்படுத்தல்.
- அர்ப்பணிப்பு சிந்தனையுடன் செயற்படல்.
- பாரபட்சமின்றி நடத்தல்
- நேர்மையாக இருத்தல்.
- பொதுநலனில் அக்கறையுடன் இருத்தல்.
- பிறருடன் நல்லுறவைப் பேணல்
- தவறுகளைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளல்
- உறுதியான தீர்மானங்களை எடுத்தல்
- உணர்ச்சிவசப்படாதிருத்தல்
- பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுதல்
- குழு உறுப்பினருடன் இணைந்து செயற்படல்.
- பிறரின் நம்பிக்கையை வென்றெடுத்தல்
- சவால்களுக்கு முகம் கொடுத்தல்
- நீண்டகாலப்பார்வையைக் கொண்டிருத்தல்.
- துணிவு
- பேரார்வம்
- தன்னம்பிக்கை
- பொறுப்புணர்வு
- சுயமதிப்பு
- மற்றவர்களை ஊக்குவித்தல்
- மற்றவர்கள் பின்பற்றத்தக்கவித்தில் நடத்தல்.
- நகைச்சுவை உணர்வுடன் பணியாற்றல்
- சுயக்கட்டுப்பாடு
- சுயமாக தீர்மானங்களை எடுத்தல்.
- நம்பத்தக்கவராய் இருத்தல்.
- திறமைகளை பாராட்டும் தன்மை.
- தொடர்ந்து கற்றுக் கொண்டு இருத்தல்.
- தொலை நோக்கு உடையவராக இருத்தல்
- ஆற்றலை சக்திவாய்ந்த விதத்தில் பயன்படுத்தல்.
- சிந்தனை, நிதானம், உறுதிப்பட பேசுதல்.
முகாமையாளரும் தலைவரும்
முகாமையாளர் | தலைவர் |
நிர்வாகம் செய்பவர் | புதுமை புகுத்துபவர் |
ஒரு பிரதி | தனித்துவமானவர் |
நிறுவனத்தை பேணுபவர் | அபிவிருத்தி செய்பவர் |
கட்டமைப்புகளில் கவனம் செலுத்துபவர் | மக்களில் கவனம் செலுத்துபவர் |
கட்டுப்படுத்துவதில் தங்கிநிற்பவர் | நம்பிக்கையை வளர்த்தெடுப்பவர் |
குறுங்கால நோக்கினை கொண்டவர் | நீண்டகால பார்வையைக் கொண்டவர் |
பிரச்சினைகளை தீர்ப்போர் | ஊக்கமளிக்கவும் தூண்டவும் செய்பவர் |
குறிப்பிட்ட இலக்குகளைத் திட்டமிடுபவர் | பொதுவான இலக்குகளைத் திட்டமிடுபவர் |
தற்போதய நிலைமையை ஏற்றுக் கொண்டவர் | அதற்கு சவால் விடுப்பவர் |
சிறந்த போர் வீரன் | சுயமான இயக்கம் கொண்டவர் |
விடயங்களைச் சரியாகச் செய்பவர் | சரியான விடயங்களைச் செய்பவர் |
தலைமைத்துவமும் வலுவாண்மையும்
தலைமைத்துவம் என்பது மக்களில் செல்வாக்கு செலுத்தும் ஒரு செயன்முறை எனின், அத்தகைய செல்வாக்கினை பிரயோகிப்பதற்கு தளமாக அமைவது அதிகாரமும், வலு வாண்மையும் ஆகும்.
அதிகாரம் என்பது ஒரு நபரை வற்புறுத்தி செயற்படச் செய்வதற்கு இன்னொருத்தருக்குள்ள "உரிமை" ஆகும். இது இவரது பதவி நிலை காரணமாக வழங்கப்படுகிறது. இதனை "Position Power" எனக் கூறலாம்.
அதிகாரம் எனப்படுகின்ற பதவி அதிகாரங்கள் (Authority) என்பது பல்வேறு கருமங்களை மேற்கொள்வதற்கு அல்லது கட்டளையிடுவதற்கு அல்லது வளங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒழுங்கமைப்பொன்றின் முகாமையாளருக்குக் கிடைக்கின்ற சட்டபூர்வ மான அதிகாரமாகும்.
தனிநபரொருவருக்கு தனது நிலைமை அல்லது பதவிக்கேற்ப கிடைக்கின்ற முறையான அதிகாரமும் அதற்கு மேலதிகமாக வேறு வழிகளில் கிடைக்கின்ற ஆற்றல்கள் அதிகாரம் எனப்படும்.
"வலுவாண்மை" என்பது பிறர் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு ஒருவருக்கிருக்கும் ஆற்றலாகும். இதனை அவர் தனது பதவி வழியாகவோ அல்லது தனிப்பட்ட ஆளுமை யின் மூலமாகவோ, மேற்குறிப்பிட்ட இரண்டினதும் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோர் பதவி நிலை இல்லாமலே பிறரில் செல்வாக்குச் செலுத்தும் தலைமைத்துவத்தை பெற்றிருந்தனர். இதுவே வலு வாண்மை எனப்படுகிறது. ஆபிரகாம், லீகுவான்யு போன்றோர் பதவியினூடாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் தமது மக்களில் செல்வாக்கு செலுத்தினர்.
எனவே, தலைவர்கள் பதவி வழியாக அதிகாரத்தையும், தமது ஆளுமையின் காரணமாக வலுவாண்மையையும் பெறுகின்றனர் எனக்கூறலாம். அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட வலுவாண்மையை ஒருவர் தானே பெற்றுக்கொள்கிறார்.
அதிகாரம் கிடைக்கப்பெறுகின்ற மூலங்கள்
- பதவியின் அடிப்படையில் சட்டரீதியாக கிடைக்கின்ற பதவி அதிகாரம் (Authority)
- சிறப்புப் பலம் (Expert Power)
- பரிசுகளை வழங்குவதற்குள்ள பலம் (Reward Power)
- தண்டனை வழங்குவதற்குள்ள பலம் (Coercive Power)
- ஆளுமைப் பலம் (Personality Power)
- தகவல் பலம் (Information Power)
- செல்வாக்குச் செலுத்தக்கூடிய பலம் (Dominance Power)
வலுவாண்மையின் வகைகள்
வெகுமதி சார்ந்த வலுவாண்மை.
இது சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு,அங்கீகாரம், புகழ்ச்சி போன்ற வெகுமதிகள் மூலம் தலைவர் தமது பணியாளர்களின் பணியினைப் பெற்றுக்கொள்வதாகும். நிறுவனத்தலைவரிடமிருந்து வரும் புகழ் வார்த்தைகள் கூட வெகுமதிகள் தான்.
அச்சுறுத்தல் வலுவாண்மை.
இது வெகுமதி சார்ந்த வலுவாண்மைக்கு எதிரானதாகும். தலைவர்க்கு கீழ்ப்படியாவிட்டால் அவர் தண்டிக்கக்கூடும் என்ற பணியாளரது அச்சத்திலிருந்து இவ்வலுவாண்மை ஊற்றெடுக்கிறது. எனினும் அச்சுறுத்தலை பயன்படுத்தும் முகாமையாளர்கள் தமது தலைமைத்துவத்தை பணியாளர் மத்தியில் இழந்து விடுவதுடன் அவர்களின் வெறுப்பையும், பகையையும் பெற்றுவிடுவர்.
உதாரணம் : முசொலினி, ஹிட்லர் போன்றோர்.
சட்டரீதியான வலுவாண்மை.
நிறுவனத்தில் ஒரு நபர் கொண்டிருக்கும் பதவிநிலை காரணமாக அவர் பெற்றுக் கொள்ளும் அதிகாரமே (Authority) சட்ட ரீதியான வலுவாண்மையாகும். இதனையே பதவிநிலை வலுவாண்மை என்போம். எனினும் ஒருவர் இத்தகைய வலுவாண்மையில் அதிகமாக தங்கியிக்கும் போது தமது தலைமைத்துவத்தை இழக்க நேரிடும்.
உதாரணம் : அதிபர் இத்தகைய வலுவாண்மையை அதிகமாக பிரயோகிப்பாராயின் பாடசாலை நேரத்துக்கு அப்பால் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் ஈடுபட ஆசிரியர்கள் மறுக்கக்கூடும். இவ்வாறான சூழ்நிலையில் அதிபரால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போய்விடலாம்.
வசீகர வலுவாண்மை.
சில சந்தர்ப்பங்களில் தண்டனையோ, வெகுமதியோ வழங்க முடியாத போதிலும், அல்லது சட்ட ரீதியான வலுவாண்மையை கொண்டிராத போதிலும் ஒரு சிலரால் பிறர் மீது செல்வாக்கு செலுத்த முடியும். அதற்கு அவரது ஆளுமையோ, வசீகரமோ காரணமாக இருக்கலாம். இதுவே வசீகர வலுவாண்மை எனப்படுகிறது. உதாரணம்: இளவரசி டயானா.
நிபுணத்துவம் சார்ந்த வலுவாண்மை.
ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சி, விசேட அறிவு அல்லது நிபுணத்துவம் கொண்டிருப் பதன் காரணமாக ஒருவர் பிறரது நடத்தையில் கொண்டிருக்கக்கூடிய செல்வாக்கு நிபுணத்துவம் சார்ந்த வலுவாண்மை எனப்படுகிறது.
உதாரணம் : ஒரு குறிப்பிட்ட பாடத்தை சிறப்பாக போதிக்கும் ஆசிரியர் இத்தகைய நிபுணத்துவம் சார்ந்த தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்துகிறார்.
உதாரணம்: பில்கேட்ஸ் கணினி சார்ந்த சாதனையை கட்டியெழுப்ப இத்தகைய வலுவாண்மையே காரணமாகும்.
முகாமையாளர் அல்லது தலைவர் வலுவாண்மையை பயன்படுத்தல்.
ஒரு முகாமையாளர் அல்லது தலைவர் வலுவாண்மையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது பற்றி கிரிபின் (Griffin,1997) பின்வருமாறு விளக்குகிறார்.
சட்ட ரீதியாக கோருதல். (Legitimate Request)
ஒரு முகாமையாளர் குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்குமாறு தனக்கு கீழ் பணி யாற்றுவோரை கோரமுடியும். இவ்வாறு கோருவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக பணியாளர்கள் ஏற்றுக்கொள்வதால் முகாமையாளரின் அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றுவர்.
உதாரணம்: அதிபர் கூறுவனவற்றை பொதுவாக ஆசிரியர்கள் பின்பற்றுவது இவ்வாறு அறிவுறுத்துவதற்கு அதிபருக்கு உரிமை இருப்பதாக அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற கார ணத்தினாலாகும்.
வெகுமதி சார்ந்த பணிவுடமை. (Instrumental Compliance)
இது ஊக்கலின் மீளவலியுறுத்தல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு பணியாளர் தனது சாதாரண கடமைகளுக்கு புறம்பானவற்றையும் கூட முகாமையாளர் கூறுவதன் காரணமாக விரும்பிச் செய்யக்கூடும். பாராட்டு அல்லது வெகுமதி ஒரு பணியை செய்ய வைப்பதற்கு கருவியாக அமைவதால் இது "கருவி சார்ந்த பணிவு டமை" எனப்படுகிறது.
உதாரணம்: மேலதிக வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பணியாளர்கள் விடுமுறை என்ற போதும் வார இறுதிகளில் பணி செய்ய சமுகமளிப்பதை குறிப்பிடலாம்.
அச்சுறுத்திப் பணிய வைத்தல். (Compliance by Coercion)
வேலையை விட்டு விலக்குதல், சம்பளத்தை நிறுத்துதல், திட்டுதல் போன்றவற்றின் மூலமும் ஒரு முகாமையாளர் தமது வலுவாண்மையை பிரயோகிக்கக்கூடும்.
தன்னுடன் இனங்காணச் செய்தல். (Personal Identification.)
தனது பணியாளருக்கு தான் ஒரு முன்மாதிரியாக (Model) இருப்பதாக ஒரு தலைவர் காணுமிடத்து அவர் வந்த நிலைமையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது வசீகர வலுவாண்மை எனப்படும்.
உதாரணம்: "நான் சொன்னால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் அவருக்கு வாக்களித்தேன்" போன்ற உணர்வை தூண்டும் கோரிக்கைகள் பணி யாளரை பணியவைத்து விடும்.
தகவல்களைத் திரித்துக் கூறல்.
சில தலைவர்கள் தகவல்களை மறைப்பதன் மூலம் அல்லது திரித்துக் கூறுவதன் மூலம் தமது பணியாளரைக் கொண்டு தாம் நினைத்ததை சாதிக்க முடியும். உதாரணம் : தாம் விரும்பிய ஒருவரை செயற்றிட்டம் ஒன்றின் தலைவராகத் தெரிவு செய்ய விரும்பினால் அவரைப் பற்றிய பாராட்டுதற்குரிய தகவல்களை மாத்திரம் தந்து விட்டு குறைகளை மறைத்து விடலாம்.
இவ்வாறு வலுவாண்மையை பயன்படுத்தல் அறவொழுக்கத்துக்கு எதிரானது. நாளை விடயம் வெளிப்படும் போது தலைவர் மீது பணியாளர் கொண்டிருக்கும் விசுவாசமும் கௌரவவும் சிதறிவிடக்கூடும்.
பின்பற்றுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தே தலைவரின் செல்வாக்கு கணிப்பிடப்படுகிறது. பின்பற்றுவோர் இல்லாமல் தலைமைத்துவம் இயங்க முடியாது. எனினும் தலைவர்கள் அனைவரும் மக்களைப்பாதுகாத்து வழிநடத்தும் பணியினைச் செய்த போதும் அவர்கள் அனைவரும் அடிப்படையில் வேறுபட்டவர்கள். தோற்றம், சிந்தனை, ஆளுமை, நடத்தை முதலிய யாவற்றிலும் ஒரே மாதிரியான தலைவர்களைக் காண்பது அரிதாகும்.
மகாத்மாகாந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாஓசேதுங், பிடல்காஸ்ரோ, மற்றும் சேகுவேரா போன்றோர் தேச விடுதலைக்காக தலைமைத்துவத்தினை வழங்கினர். ஜூலியஸ் சீசரும், மகா அலெக்சாண்டரும், ஜெங்கிஸ்கானும், இராஜராஜசோழனும், அக்பரும் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பினர்.
கௌதம புத்தரும், முஹம்மது நபி(ஸல்) அவர்களும், திருநாவுக்கசரசரும், கொன்புயூசியசும், மார்ட்டின் லூதரும் மக்களுக்கு ஆன்மீகத் தலைமைத்துவத்தை வழங்கினர்.
ஜவகர்லால்நேரு, லீகுவான்யு, மகத்தீர் மொஹமட், போன்றோர் தேச மீள்நிர்மாணத்தில் ஈடுபட்ட தலைவர்களாவர்.
ஆடொப் ஹிட்லரும், முசோலினியும், இடி அமீனும் கூட தேசத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர். மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுள்ளனர்.
இந்திய, கிரேக்க இதிகாசங்கள் தலைமத்துவம் பற்றிக் கூறுகின்றன. சோக்ரற்றீஸ், பிளேற்றோ, அரிஸ்டோட்டில் முதலிய கிரேக்க தத்துவஞானிகள் தலைமைத்துவத்தை விளக்க முயன்றுள்ளனர்.
பிளேற்றோ எழுதிய ”குடியரசு” (The Republic) என்னும் நூல்தான் தலைமைத்துவம் பற்றிய ஒரு கோட்பாட்டை கட்டமைக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சி எனலாம்.
அதே கால கட்டத்தில் சீனாவில் வாழ்ந்த போரியல் தத்துவாசிரியரான சுன்சூ இராணுவ, அரசியல் தலைமைத்துவம் பற்றிய தனது நூலில் தலைமைத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.
பின்வந்த காலத்தில் இத்தாலிய அரசியல் அறிஞரான நிக்கலோ மக்கியவல்லி (the Prince) இந்தியாவில் மௌரியப் பேரரசில் வாழ்ந்த கௌடில்யரும் (அர்த்த சாஸ்திரம்) தலைமைத்துவம் பற்றி விளக்கியுள்ளனர்.
இவ்வாறு தலைமைத்துவம் பற்றிய கரிசனை, ஆர்வம், எதிர் பாரக்கைகள், ஊகங்கள், அனுமானங்கள் ஆகியன நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளன.
தலைமைத்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் 20 ஆம் நுற்றாண்டிலேயே ஆரம்பமாகின. 1939 இல் கேற்லெவின் தலைமையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முதலாவது.
1939 இல் தலைமையில் லிப்பிற், வைற் ஆகியோர் அயோவா பல்கலைக்கலகத்தல் மேற்கொண்ட ஆய்வில் தலைமைத்துவங்கள் பின்வருமாறு அடையாளங்காணப்பட்டன.
- ஜனநாயகத் தலைமைத்துவம்
- எதேச்சதிகாரத் தலைமைத்துவம்
- தலையிடாத்தலைமைத்துவம்.
தலைமைத்துவ வகைகள்.
ஜனநாயகத் தலைவர்கள்
- பங்கேற்பு தீர்மானங்களை மேற்கொள்வர்.
- இதனால் பணியாளின் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் பெறமுடியும்.
- தமது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படுவதால் பணியாளர் தொழில் திருப்தி அடைவ தோடு தம்மை உரித்தாளர்களாகக் கருதி செயற்படவும் இடம் ஏற்படுகிறது.
- பங்கேற்பு காரணமாக தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் தாமதம் ஏற்படினும் பொதுவாக மாற்றங்களைக் குறைந்த எதிர்ப்புடன் இசைவுபடுத்துவதற்கு ஜனநாயக தலைவர்களால் முடியும்.
எதேச்சதிகாரத் தலைவர்கள்
- தனித்துவமாகத் தீர்மானம் மேற்கொள்ளக் கூடியவர்கள்.
- அதனால் காலப்போக்கில் பணியாளர் அதிருப்தி கொள்வதோடு தலைமைத்துவத்துக் கெதிராகவும் மாறக்கூடும். அனுபவமற்ற, கூடிய மேற்பார்வை தேவைப்படுகின்ற பணியாளருக்கு இத்தகைய தலை மைத்துவம் ஏற்புடையது.
- சூழ்நிலையில் தொழிற்பட விரும்புவோரும், படைத்திறன் கொண்டோரும் இத்தகைய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தலையிடாத் தலைவர்கள்
- இவர்கள் பணியாளரை வழிப்படுத்தும் ஆற்றல் இல்லாதவர்கள்.
- இவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்காமையினால் நிறுவனத்தின் அராஜகம் ஏற்பட வழியேற்படும்.
- ஆனால் கூடிய அனுபவமும் ஆற்றலும் கொண்ட பணியாளர்கள் இத்தகைய தலை மைத்துவத்துடன் ஒத்துப் போவார்கள்.
- உற்பத்தி திறனும் வெளியீடும் இத்தகைய தலையிடாத் தலைமைத்துவத்தினால் பாதிக்கப்படமாட்டாது.
பீட்லர் 1967 இல் மேற்கொண்ட இரு பரிமாண ஆய்வு, ஒஹியோ பல்கலைக்கழக ஆய்வு, மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு மற்றும் பிளேக் மற்றும் மோற்றன் 1960 ஆய்வுகளில் இரண்டு தலைமைத்துவ வகைகள் இனங்காணப்பட்டன. அவை,
- பணியாளர் சார்ந்த தலைமைத்துவம்
- பணி சார்ந்த தலைமைத்துவம்.
பணியாளர் சார்ந்த தலைமைத்துவம்.
- வசீகரத் தலைவர்களைப் போல தமது பணியாளரை ஊக்குவிப்பர்.
- அவர்களது நலன்களில் கூடிய அக்கறை செலுத்துவதோடு அவர்களது தொழில்சார் திறன்களையும் தொழில் திருப்தியையும் மேம்படுத்த தம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்வர்.
சார்ந்த தலைவர்கள்.
- இலக்கினை அடைவதையே தமது கருத்தில் கொண்டிருப்பர்.
- பணியாளர்களின் நலன்கள், தொழில்திருப்தி மற்றும் அவர்களது தேவைகளில் இவர் கள் கவனம் செலுத்துவதில்லை.
- எனவே, பணியாளர் ஊக்குவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
பதவி என்பது வேறு, பண்பு என்பது வேறு....! பதவியில் அதிகாரம் இருக்கும்.. ஆனால் பண்போடு கூடிய தலைவனுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்...! |
வெற்றி பெறக்கூடிய தலைவருக்கும் தோல்வி அடையக் கூடிய தலைவருக்குமிடையிலான வேறுபாடுகள்
வெற்றியாளர் | தோல்வியாளர் |
பொறுப்புக்களை ஏற்பார் | வாக்குறுதிகளை வழங்குவார் |
பிரச்சினைக்கு முகங்கொடுப்பார் | பிரச்சினையைச் சுற்றுவார் |
வெற்றிபெற்றோரை மதித்து அவர்களிடமிருந்து கற்பார் | வெற்றிபெற்றோரை வெறுப்பார். அவர்களைக் குறைகாண முயற்சிப்பார் |
தனது கடமைகளை விட கூடிய பொறுப்புணர்வு காட்டுவார் | நான் இங்கே பணிபுரிகிறவன் மட்டுமே என்பார் |
எதற்காகப் போராட வேண்டும், எதற்கு இணங்கிக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்திருப்பார் | இணங்கக் கூடாததற்கு இணங்குவார், தேவையற்றதற்குப் போராடுவார் |
தோல்வியைக் கண்டு பயப்பட மாட்டார் | வெற்றி பெறுவதைப்பற்றி பயப்படுவார் |
நான் சிறந்தவன் தான். ஆனால் இதைவிடவும் சிறந்தவனாக இருந்திருக்க வேண்டும் என்பார் | பெரும்பாலான ஏனைய மனிதர்கள் அளவுக்கு நான் மோசமானவன் அல்லன் என்பர் |
விரும்பப்படுவதைவிடவும் கூடுதலாக வியந்து பாராட்டப்படுவதை எதிர்பார்ப்பார் | வியந்து பாராட்டப்படுவதை விடவும் கூடுதலாக விரும்பப்படுவதை எதிர்பார்ப்பார். |
தான் தவறிழைத்தால் தவறு என்னுடையது என்பார் | அது எனது தவறல்ல என்பார் |
எதற்கும் விளக்கம் அளிப்பார் | நொண்டிக் காரணங்கள் கூறுவார் |
எந்நேரமும் பேசுவதற்கும் முன் வைத்ததற்கும் தயார் நிலையில் இருப்பார். | பேசுவதற்கு சந்தர்ப்பம் தேடுவார் |
அதிகாரம் மையப்படுத்தல் மற்றும் பன்முகப்படுத்தல்.
அதிகாரம் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள முறைக்கேற்ப நிறுவனம் மையப்படுத்தப்பட்டதா, பன்முகப்படுத்தப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
மையப்படுத்தல்
நிறுவனத்தின் தீர்மானமெடுக்கும் சகல அதிகாரமும் அதன் உயர் முகாமையின் அடிப்படை யில் மையப்படுத்தப்பட்டிருத்தல் மையப்படுத்தல் (Centralization) எனப்படும்.
மையப்படுத்தலின் அனுகூலங்கள்
- மிக விரைவாகத் தீர்மானமெடுக்க முடிதல்.
- தீர்மானங்களில் ஒருமைப்பாடு காணப்படல்.
- கட்டுப்பாட்டுக் கருமங்கள் இலகுவாக அமைதல்.
- தொடர்பாடல் இலகுவாக அமைதல்.
- குறைந்த கிரயம்
மையப்படுத்தலின் வரையறைகள்
- தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது கடினமானது.
- ஊழியர் ஊக்குவிப்பு குறைவடைதலும் திருப்தியின்மை அதிகரித்தலும்.
- மிகச் சிறந்த தீர்மானங்களை எடுப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போதல்.
பன்முகப்படுத்தல்
நிறுவனமொன்றின் தீர்மானமெடுக்கும் அதிகாரமானது உயர்மட்ட முகாமையிலிருந்து கீழ்மட்ட முகாமைக்கு ஒப்படைக்கப்படல் பன்முகப்படுத்தல் (Decenralization) எனப்படும்.
பன்முகப்படுத்தலின் அனுகூலங்கள்
- உயர்மட்ட முகாமையில் கருமங்கள் குறைவடைதல்.
- தரமான தீர்மானங்களை எடுக்க முடிதல்.
- இலகுவாகத் தீர்மனங்களை நடைமுறைப்படுத்த முடிதல்.
- கீழுள்ள ஊழியர்களை முன்னேற்றுதல்.
- ஊழியர்களின் ஊக்குவிப்பு உயர்வடைவதுடன் திருப்தியும் மேம்பாடடைதல்.
பன்முகப்படுத்தலின் வரையறைகள்
- தீர்மானமெடுத்தல் தாமதமாதல்.
- கிரயம் குறைவடைதல்.
தலைமைத்துவம் என்பது தலைமைத்துத்தோடு பிறந்த ஒரு தனிப்பட்டக் குழுவினருக்கானது அல்ல. தலைமைத்துவத்தின் அடித்தளமாக விளங்கும் பண்பு, நலன்கள் நம் வசப்படக் கூடியவை. அவற்றையும் ஆழந்த விருப்பத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒரு தலைவராவதிலிருந்து உங்களை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.
ஒரு கண் கவர் கிராமத்தைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சுற்றுலாப் பயணியர் குழுவைப்பற்றி த லாஸ்ட் டேஸ் நியூஸ்லெட்டர்ஸ்'ல் லியோனர்டுஹில் கூறுகின்றார். அவர்கள் ஒரு வேலியின் அருகே அமர்ந்திருந்த ஒரு முதியவரைத் தாண்டிச் சென்ற போது பயணிகளில் ஒருவர் அவரிடம் "இக்கிராமத்தில் மாமனிதர்கள் யாரேனும் பிறந்துள்ளனரா" என்று கேட்டார். இல்லை "இங்கு குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன" என்று அந்த முதியவர் பதிலளித்தார்.
02. முன்வைப்புத் திறன்கள்.
முன்வைப்பு என்பது பல்வேறு பேச்சு மூலமான தொடர்பாடல் சந்தர்ப்பங்கள் ஆகும். ஒரு குழுவினருக்கு விடயங்களை முன்வைத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
முன்வைப்பு பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாகும்.
- எப்போது? எங்கு?
- ஏற்கனவே பரீட்சயமானதா? அல்லது புது விடயமா? புது இடமா?
- முறை சார்ந்ததா அல்லது ஓரளவு முறைசார்ந்ததா?
- பெரிய குழுவிற்கா? / சிறிய குழுவிற்கா?
- ஏற்கனவே தெரிந்த பார்வையாளர்களா?, புதியவர்களா?
- எந்த உபகரணம? / எந்த தொழில் நுட்பம் பயன் படுத்ததப்படும்?
- பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு யாது? அல்லது கற்க விரும்பும விடயம் யாது?
முன்வைப்பவர்
- முன்வைப்பவரின் பங்கு பார்வையாளர்களுடன் தொடர்பாடுதல், முன்வைப்பை கட்டுப்படுத்தல்
- இடைவினையாற்றுகை மூலம் பார்வையாளர்களை கட்டுப்படுத்தல்.
- பார்வையாளர்களை சாத்தியப்படுத்தல்.
பார்வையாளர்கள்
- சமர்ப்பிப்பவரிடம் இருந்து செய்தியைப்பெறல்
- சொந்த அனுபவங்கள், அறிவு, சுயவிழுமியங்கள், உணர்வுகளில் இருந்து வடித்தெடுத்துப் பெறல்.
முன்வைப்பு ஏன் அவசியம்?
- ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் போது.
- பார்வையாளர்கள் தகவல்களை திறம்பட புரிந்து கொள்வதற்கு.
- ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை விளக்கப்படுத்துவதற்காக.
- விளம்பர தயாரிப்புகளுக்கு.
- பாடங்களை முன் வைப்பதற்கு.
- அறிக்கைகளை உண்டாக்குவதற்கு.
முன்வைப்பு ஒன்று எவ்வாறு சிறந்த வகையில் அமைய வேண்டும்?
- எழுத்து வடிவமும் மொழிப் பிரயோகமும் - தயாரிக்கப்பட்ட நிகழ்த்துகையில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களும் மொழியின் பிரயோகமும் தெளிவாக காணப்படுதல்.
- படங்கள் சித்திரங்கள் அட்டவணைகள் வரைபடங்களை உட்பகுத்துதல் - பொருத்தமான ஓரிரு படங்களை உட்பகுத்தல்.
- நோக்கங்களை கருத்தில் கொள்ளல் - பல்லூடகத்தை (Multimedia) பயன்படுத்தும் போது பார்வையாளர்களின் நோக்கங்களை கருத்தில் கொள்ளல்.
- அசையூட்டல் (Animation), ஒளி (Video), ஒலி (Sound) ஒரு படவில்லையில் ஒன்றை மாத்திரமாவது உட்பகுத்துவது - பொருத்தமானதாக அமையும் மாற்றமாக சத்தம் மாத்திரம் காணப்பட்டால் பார்வையாளர்களுக்கு அசோக் கருத்தை உண்டாக்கலாம்.
- நிறங்களைப் பயன்படுத்தல் - முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிடும் பொழுது அதனை சிவப்பு நிறத்தில் அல்லது தடித்த எழுத்துக்களில் வித்தியாசமானதாகவும் எழுத்துக்களை வடிவங்களை தயாரித்து அதன் மூலமாக வேறுபாடுகளை இனம் காட்டுதல்.
முன் வைப்பின் படி முறைகள் - (4P)
(01) திட்டமிடல் (PLAN)
(02) தயார்படுத்தல் (PREPARE)
(03) பரீட்சயப்படுத்தல் (PRACTICE)
(04) சமர்ப்பித்தல் (PRESENT)
(02) தயார்படுத்தல் (PREPARE)
(03) பரீட்சயப்படுத்தல் (PRACTICE)
(04) சமர்ப்பித்தல் (PRESENT)
திட்டமிடல் (PLAN)
- சுருக்கமான மதிப்பீட்டை விளக்கி புரிந்து கொள்ளுங்கள். ...
- உங்கள் பார்வையாளர்கள் யார் என்று சிந்தியுங்கள்.
- உங்கள் தலைப்பை ஆராயுங்கள். ...
- உங்கள் முக்கிய செய்தியை அடையாளம் காணவும்.
- உங்கள் உள்ளடக்கத்தைத் திட்டமிட்டு ஒரு அவுட்லைனை உருவாக்கவும்.
- உங்கள் விளக்கக்காட்சியை எழுதி, உங்கள் காட்சி எய்ட்ஸ் தயார் செய்யுங்கள்.
- உங்கள் விளக்கக்காட்சியைப் பயிற்சி செய்யுங்கள்.
தயார்படுத்தல் (PREPARE)
- உங்கள் விளக்கக்காட்சியை கோடிட்டுக் காட்டுங்கள்.
- உங்கள் விளக்கக்காட்சியை நேரத்திற்கு முன்பே பயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் விளக்கக்காட்சியைப் படித்து திருத்தவும்.
- உங்கள் பார்வையாளர்களை மனதில் வைத்து எழுதுங்கள்.
- தொழில்முறை பேச்சாளர்களிடமிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- உரிய வேளையில் தயார்படுத்தல்களை மேற்கொள்வதுடன், முன் வைத்தல் செய்யும் இடத்திற்கும் உரிய வேளையில் வந்து விடுதல் வேண்டும்.
- உங்கள் உடல் மொழி செய்கைகளை சிறப்பாக முன்வைத்தல் செய்யும்போது செய்வதற்கான முன் பயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் செய்து கொள்ளுங்கள்.
- சில ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
பரீட்சயப்படுத்தல் (PRACTICE)
- விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான உங்கள் விளக்கக்காட்சியை PowerPoint இல் திறக்கவும்.
- ஸ்லைடு ஷோ தாவலில், ஒத்திகை குழுவில், பயிற்சியாளருடன் ஒத்திகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விளக்கக்காட்சியானது ஸ்லைடு ஷோவைப் போலவே முழுத்திரைக் காட்சியில் திறக்கும்.
- நீங்கள் ஒத்திகையைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது, உரையாடல் பெட்டியில் ஒத்திகையைத் தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சமர்ப்பித்தல் (PRESENT)
- உங்களை நீங்களே நல்ல நிலையில் நல்ல மனப்பான்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும்
- நிதானமாக சிரித்து செயல்படுங்கள். ...
- உங்கள் குறிப்புகளை முழு நேரமும் வாசிப்பதற்குப் பதிலாக உங்கள் பார்வையாளர்களுடன் கண் தொடர்பு கொள்ளுங்கள்.
- உங்களது கவனிகளை தவிர்த்து அதற்கு மாற்றமாக செயல்படவும்.
- ஒரே சொற்களை அல்லது ஒரே வசனங்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை தவிர்க்கவும்.
- உங்களது பதட்டத்தை அவதானித்து அதற்கு மாற்றிடாக உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்.
முன்வைப்பொன்று தோல்வி அடைவதற்கான காரணங்கள்
- தெளிவற்ற உச்சரிப்பு
- தலைப்புக்கு அப்பாற்பட்ட விளக்க உரை
- பொருத்தமற்ற/ தெளிவற்ற விளக்கப் படங்கள்
- நேர முகாமைத்துவத்தை பேணாமை.
- பதட்டமாகவும், சபை கூச்சத்துடனும் இருத்தல்.
- உள்ளடக்கம் போதுமற்றதாக இருத்தல்
- அளவுக்கு அதிகமான உள்ளடக்கம்
- பார்வையாளர்கள் இடை தொடர்பு பேணாது இருத்தல்
- முன்வைப்பாளரின் சத்தம் குறைவாக இருத்தல்
முன்வைப்புக்கான மென்பொருள்கள். (Presentation softwares)
விளக்கக்காட்சி மென்பொருள் (Presentation Software) மின்னணு ஸ்லைடு ஷோ (electronic slide show) வடிவில் தகவலைக் காண்பிக்க உங்களை அனுமதிக்கிறது. ஸ்லைடுஷோவில் (Slides in a slideshow) உள்ள ஸ்லைடுகள், உரை, படங்கள், கிளிபார்ட், தரவுகளின் வரைகலை பிரதிநிதித்துவங்கள் (charts) (விளக்கப்படங்கள்), ஆடியோ (Audio), அனிமேஷன் (Animation) மற்றும் வீடியோ (Video) மற்றும் வெளிப்புற மூலங்கள் (external sources) மற்றும் பிற பொருட்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.
அவைகள் : Visme, Haiku Deck, Prezi, Microsoft Powerpoint, Canva and Google Slides.
அனேகமாக கற்றல் செயல்பாடுகளுக்கு Microsoft Powerpoint மற்றும் Google Slides ஆகியவற்றை அதிகமாக எமது மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்துகின்றனர்.
சிறந்த முன்வைப்பாளரின் பண்புகளாக இருக்க வேண்டியவைகள்
- பார்வையாளர்களுக்கு இடையிலான பார்வை தொடர்பு கண் தொடர்பை தெளிவாக பேணவும். மேலும் கண் தொடர்பை வைத்து புன்னகைத்தவாறு உங்கள் முன்வைப்பை செய்யவும்.
- சைகைகள் மற்றும் முகபாவனைகளை பார்வையாளர்கள் கவரும் வண்ணமாகவும் நீங்கள் முன்வைக்கும் விடையங்களை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும் உங்கள் முன்வைப்புக்களை செய்யவும்.
- முக்கியமாக நீங்கள் முன்வைப்பு ஒன்றை செய்யும் போது உங்களது சிந்தனைகளை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அதாவது உங்களது கவனச்சிதறல்களை தவிர்த்து கொள்ளவும் வேண்டும்.
- நீங்கள் எடுத்துக்கொண்ட விடயங்களை தெளிவான மொழி நடையிலும், உச்சரிப்புத் தொனியிலும் செய்வதற்கு நீங்கள் தயாராக இருத்தல் வேண்டும். மேலும் அதற்கான முன் பயிற்சியினை முறையாக மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
- முன்வைப்பின் போது நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
நன்றி.
« Previous Next »