Type Here to Get Search Results !

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையாக) கடந்து வந்த பாதை

மதவாக்குளம் தேசிய பாடசாலை கடந்து வந்த பாதை

இலங்கை தாய்த்திரு நாட்டின் வட மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதே மதவாக்குளம்  தேசிய பாடசாலையாகும். பள்ளம கோட்டக் கல்விப் பிரிவின் கீழ் இயங்கும் மூன்று தமிழ் மொழிப் பாடசாலைகளில் மதவாக்குளம் தேசிய பாடசாலையிலேயே அதிக மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மூன்று பக்கங்கள் குளத்தினால் சூழப்பட்டு பச்சை பசேலென காட்சியளிக்கும் ரம்யமான சூழலில் பாடசாலை அமைந்திருப்பதே பாடசாலையின் அழகை மெருகூட்டுவதாக அமைகின்றது. புத்தளம்  வலயக்கல்வி பணிமனை யினால் சிறந்த சுற்றாடலை கொண்ட பாடசாலையாக மதவாக்குளம் தேசிய பாடசாலை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தமை அதன் நிழற்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

1900 ஆண்டுகளில் இருந்து மதவாக்குளம் பிரதேசத்திற்கு முஸ்லிம் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விடாப்பிடியோடுஇருந்த எமது முன்னோர்களான இப்ராலெப்பை, இஸ்மாலெப்பை, நெய்னா லெப்பை, இ.இப்ராலெப்பை, அகமது லெப்பை ஆகியோரின் முயற்சியினால் மதவாக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் 1922.08.09 ஆம் திகதி இப் பாடசாலை உருவாக்கப்பட்டது. இப்பாடசாலைக்கு முதலாவது அதிபராக திரு.பெரியய்யா அவர்களும் முதல் மாணவராக திரு. மு.காசிலெப்பை என்பவரும் இருந்துள்ளனர். 39 மாணவருடன் ஒரு ஓலை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1927ஆம் ஆண்டு ஒரு நிரந்தர T வடிவக் கட்டிடத்தை முதன்முதலாக பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு இரண்டு வகுப்பறை கட்டிடங்களையும்  1990ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அசோக வெடிகமங்காவ அவர்களினால் ஒரு வகுப்பறை கட்டிடத்தையும் பெற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஒரு வகுப்பறைக் கட்டிடத்தையும் 1996 ஆம் ஆண்டு மர்ஹூம் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் திரு.அஷ்ரப் அவர்களினால் ஒரு 100 மீட்டர்  கொண்ட ஒரு வகுப்பறை கட்டிடத்தையும் பெற்றுக்கொண்டது. 2017 ஆம் ஆண்டு ஆரம்ப பிரிவு கட்டிடம் ஒன்றையும் அதே வருடம் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பிரிவு கட்டிடம் ஒன்றையும் ஆரம்பப்பிரிவு  கற்கை வள நிலையம் ஒன்றையும் பெற்றுக் கொண்டது.

மதவாக்குளம் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 40 அதிபர்கள் கடமையாற்றி இருக்கின்றனர். மதவாக்குளம் தேசிய பாடசாலையின் வளர்ச்சியை எடுத்து நோக்குகின்றபோது 1962 ஆம் ஆண்டு தரம் 8 வரை ஆரம்பிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டதோடு 1993ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரமும் ஆரம்பிக்கப்பட்டது. 1C பாடசாலை வகைக்குள் காணப்படும் மதவாக்குளம் தேசிய பாடசாலையானது அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இருந்ததோடு 2021 ஆம் ஆண்டிலிருந்து மதவாக்குளம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. 51 ஆசிரியர்களும் 960 மாணவர்களுடனும் காணப்படும் இப்பாடசாலையின்  வளர்ச்சியில் தற்போதைய அதிபர் I.முகம்மட் அவர்கள் மனித, பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வதில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.  இப்பாடசாலையில் கல்விப் பெறுபேறுகள் பாடசாலையின் கல்விச் சாதனைகளாகக் குறிப்பிடலாம். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் A.S.அஸ்கர் என்ற மாணவன் புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தைப் பெற்று ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்றதோடு  2017 ஆம் ஆண்டு க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் 2 மாணவர்கள் 9A சித்தி பெற்றதோடு 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று மாணவர்கள் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டமையும்  கல்வி சாதனைகளாகக் குறிப்பிடலாம். இப்பாடசாலையில் இருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளதோடு 25 மாணவர்களுக்கு மேற்பட்டவர்கள் கல்வியற் கல்லூரிகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது மதவாக்குளம்  தேசிய பாடசாலையில் கலை, வர்த்தக துறைகள் காணப்படுகின்றது. தற்போது தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டுள்ள மையினால் எதிர்வரும் காலங்களில் கணித, விஞ்ஞான துறைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

மதவாக்குளம் தேசிய பாடசாலையானது கல்வியோடு  இணைந்து இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மேலோங்கிக் காணப்படுகின்றது. கலை, விளையாட்டு நிகழ்ச்சிகளில் உயர்ந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ளும் இப் பாடசாலையானது 2017 ஆம் ஆண்டு இஸ்லாமிய தின பகீர் பைத் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அத்தோடு தமிழ் தின போட்டி, ஆங்கில தினப் போட்டி, சிங்கள போட்டி, சமூக விஞ்ஞான போட்டி ஆகியவற்றில் வலய மட்டத்தில் அதிக  இடங்களையும் பெற்றுக் கொள்கின்றது. பள்ளம கோட்டத்தில்  பெரிய விளையாட்டு மைதானத்தை கொண்ட பாடசாலை இதுவாகும். இதனால் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் கூட இங்கு இடம் பெறுவது முக்கியமான விடயமாகும். மதவாக்குளம் தேசிய பாடசாலையானது கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டப் போட்டிகளில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐந்து வருடங்களாக புத்தளம் தெற்கு கோட்டத்தில் 19, 21 வயதிற்கு கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளில்  முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. பாடசாலை மாணவர்களை நஜ்ம்,கமர்,சம்ஸ் என மூன்று இல்லங்களாக பிரித்து  வருடம் விட்டுவிட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவது முக்கியமான அம்சமாகும். விளையாட்டுப் போட்டிகளின் போது மதவாக்குளம் கிராம மக்கள், பழைய மாணவர்கள்  முன்னின்று நடாத்தி முடிப்பர். அத்தோடு வருடா வருடம் மாணவர்களை ஆண்டு ரீதியாக கல்விச்சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்லப்படுகின்றது.

மதவாக்குளம் தேசிய பாடசாலையின் ஒவ்வொரு காலப் பகுதிகளிலும் இருந்த அதிபர்களின் சேவைகள் அளப்பரியது. இவற்றிலே திரு.C.S.M. ஹனிபா அதிபருடைய காலப்பகுதியில் 1972 ஆம் ஆண்டு மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆக பெயர் மாற்றப்பட்டது. அத்தோடு முன்னாள் அதிபர் திரு.I.M. பஷீர் அவர்களுடைய காலப்பகுதியிலேயே அதிகமான மனித, பௌதிக வளங்கள் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றன. இவருடைய காலப்பகுதியில் இரு இரு மாடி கட்டிடங்கள் உட்பட 7 வகுப்பறை கட்டிடங்களும், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பாடசாலைக்கு  இணைக்கப்பட்டனர். அத்தோடு முன்னாள் அதிபர்களான S.L.S. சஹாப்தீன்,Y.A. சலாம்,M.L.S. ஹமீட் போன்ற முன்னாள் அதிபர்களுடைய காலப் பகுதிகளிலும் அதிகமான மனித, பௌதிக வளங்கள் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றன. தற்போதைய பாடசாலை கீதமும் பாடசாலை இலச்சினையும் முன்னாள் அதிபர் I.M. பஷீர் அவருடைய காலப்பகுதியிலேயே  இயற்றப்பட்டன.

ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய கல்வியினூடாக சிறந்த பிரஜைகளை உருவாக்குதல் என்ற தூர நோக்கோடு செயற்படும் இப்  பாடசாலையானது ஒழுக்காற்று குழுவின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் வழங்கிவருகின்றது.  பாடசாலையின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களாக அதிபர் I. முஹம்மட் பிரதி அதிபர் M.T.  சலாஹுதீன் ஏனைய ஆசிரியர்களான S.M. உவைஸ் , I.L ஹனீஸ், S.I.M. இனாஸ், M.L. நளீம், M.L.A. சலாம்  ஆகியோர் காணப்படுவதோடு இவர்கள் பாடசாலையின் உள்ளக, வெளியக மேற்பார்வைகளை செய்து வருகின்றனர்.

விஞ்ஞான ஆய்வுகூடம்

மதவாக்குளம் தேசிய பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ்  அப்போதைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இனால் வழங்கப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயமானது  தேசிய பாடசாலைக்கான அந்தஸ்தினை அரசின் சுபீட்சத்தின் நோக்கு என்ற திட்டத்தின் கீழ் ஆயிரம் தேசிய பாடசாலை என்ற கட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலையாக உள்வாங்கப்பட்டு இருந்தமை தொடர்பான கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் புத்தளம் வலயக்கல்வி பணிமனை மூலமாக 2021.05.17ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. ஆனமடுவ தேர்தல் தொகுதியில் முதலாவது அரசினர் தமிழ் மொழி பாடசாலையாக மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயமே ஆரம்பிக்கப்பட்டது.

மதவாக்குளம் தேசிய பாடசாலையின் வளர்ச்சியில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் என அனைவரும் கைகோர்த்திருப்பது முக்கியமான விடயமாகும்.

சேவையாற்றிய அதிபர்களின் விபரங்கள் 

 பெயர்
 01. திரு. பெரிய அய்யா (உடப்பு)
 02. திரு. M. நல்லமுத்து
 03. திரு. P. ஆரோக்கியம்  (மட்டக்களப்பு)
 04. திரு. M. இராசநாயகம்
 05. திரு. T. பேராயுரம் பிள்ளை
 06. திரு. M.M. மர்சூக்
 07. திரு. E.M. ஜோசெப்
 08. திரு. M.M.ஹனீபா
 09. திரு. M. முஹ்ஸின்
 10. திரு. M.M. ஹனீபா
 11. திரு. A.M. சாலிஹ்
 12. திரு. M.P. ஜமால்தீன்
 13. திரு. M.T. மஹ்மூர்
 14. திரு. S.L.S. ஸஹாப்தீன்
 15. திரு. N.P. உவைஸ்
 16. திரு. P.M. அல்வின் பெர்னாந்து
 17. திரு. M.M.M. இப்ராஹீம்
 18. திரு. S. செய்னுலாப்தீன்
 19. திரு. A.H.M. சுபியான்
 20. திரு. M.S.A. தாஹீர்
 21. திரு. M.S.M. அபூஉபைதா
 22. திரு. M.S.M. மர்சூக்
 23. திரு. A.M. பாறூக்
 24. திரு. K.S. ஆப்தீன்
 25. திரு. L.A. சலாம்
 26. திரு. A.M.M. பாரூக்
 27. திரு. C.S.M. ஹனீபா
 28. திரு. A.M.S. இப்ராஹீம்
 29. திரு. K.M.A. அஸீஸ்
 30. திரு. A.L.H. மரிக்கார்
 31. திரு. M.L.S. ஹமீட்
 32. திரு. M.C. மொஹிதீன்
 33. திரு. S.L.S. ஸஹாப்தீன்
 34. திரு. Y.A. சலாம்
 35. திரு. M.L.S. ஹமீட்
 36. திரு. I.L. ஜமால்தீன்
 37. திரு. L.M. பசீர்
 38. திரு. M.I.M. நெளசாத்
 39. திரு. L.M. பசீர்
 40. திரு. I. முஹம்மட்

மதவாக்குளம் தேசிய பாடசாலையின் வளர்ச்சியில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் என அனைவரும் கைகோர்த்திருப்பது முக்கியமான விடயமாகும்.

தேசிய பாடசாலையாக தரம் உயரப்பட்டு இருக்கும் மதவாக்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயம் (மதவாக்குளம் தேசிய பாடசாலை)க்கு எமது இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இப் பாடசாலை மென்மேலும் வளர்ச்சியடைய எமது வாழ்த்துக்கள். 

மேலும் எங்களுக்கு இப்பாடசாலை பற்றிய தகவல்களை தொகுத்து அனுப்பிய ஆசிரியர் S.I.M. இனாஸ் (BA) அவர்களுக்கும், அதிபர் I. முஹம்மட் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.