பாடசாலை நிர்வாகம்
பாடசாலையை ஒர் அரச நிறுவனமாகக் கொண்டால் அதன் நிருவாகத் தலைவராக விளங்குபவர் பாடசாலைக்குப் பொறுப்பான அதிபராகவும்.
அதிபர்கள் தமது கடமைப் பொறுப்புகளில் சிலவற்றை பிரதி அதிபர்களுக்கு அதிகாரப்பரவல் மூலம் பகிரந்தளித்த போதிலும் சில கடமைகள் அதிபர்கள் மூலமாகவே செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். அவற்றில் சில பின்வருமாறு:
1. ஆசிரியர்களின் வருடாந்த சம்பள ஏற்றப் படிவங்களில் சிபாரிசு செய்து கையொப்பமிடல்
2. இலவசப் புகையிரத ஆணைச்சீட்டில் கையொப்பமிட்டு பதவி முத்திரையிடல்
3. இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் விடுவிப்புக் கடிதத்தில் கையொப்பமிடல்
4. வெளிநாட்டு லீவு கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் பதில் கடமை தொடர்பான கடிதத்தில் கையொப்பமிடல்
5. ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பத்தில் சிபாரிசு/ தேவையான குறிப்பு எழுதி கையொப்பமிடல்
6. அரைச்சம்பள / சம்பளமற்ற பிரசவ விடுமுறை கோரும் ஆசிரியைகளின் லீவு கோரிக்கையில் சிபாரிசு / குறிப்பு இட்டு கையொப்பமிடல்
7.கோட்டக்கல்வி அலுவலகம் / வலயக்கல்வி அலுவலகம் / மாகாணக்கல்வித் திணைக்களம் / கல்வியமைச்சு மூலம் தகவல்கள் கோரப்படும் போது அதற்கான அறிக்கையில் கையொப்பமிடல்
8. பாடசாலை மண்டபம் / மைதானம் போன்றவற்றை தனியார் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரும்போது சிபாரிசினை வலயக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும் கடிதத்தில் கையொப்பமிடல்
9. பாடசாலை கல்விச் சுற்றுலா செல்லும் போது அதற்கான அனுமதி கோரும் கடிதத்தில் கையொப்பமிடல்
10. மாணவரின் செயலாற்றுப் படிவம் / விடுகைப் பத்திரம் (கல்வி B-59) வழங்கும்போது அதில் கையொப்பமிடல் (க.அ.2008/39)
11. வழங்கப்பட்ட சம்பளப்பட்டியலில் (Paid Paysheet) கையொப்பமிடல்
12.D படிவத்தில் சம்பளம் வழங்கும்போது / A படிவத்தில் வழங்கப்படாத சம்பளத்தை திருப்பி அனுப்பும்போது கையொப்பமிடல்.
பாடசாலைகளில் நடைபெறும் செயற்பாடுகளை இரு பகுதியாகப் பிரிக்கலாம்.
01. நிர்வாகச் செயற்பாடு
02. நிதிச் செயற்பாடு
01. நிர்வாகச் செயற்பாடு
பாடசாலைச் செயற்பாடுகள் யாவும் எழுத்து மூலம் ஆவணப்படுத்தல் வேண்டும். இதனால் பாடசாலைகளில் நிர்வாகச் செயற்பாடுகளைச் செயற்படுத்துவதற்காக பதிவேடுகள் பேணப்படுகின்றன. இப்பதிவேடுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.நிர்வாகச் செயற்பாடு பதிவேடுகள்
01. பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் சம்பந்தப்பட்டவை
02. வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்டவை
பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் சம்பந்தப்பட்டவை
உ+ம் :
1. சம்பவத் திரட்டுப் பதிவேடு
2. ஆசிரியரது வரவுப் பதிவேடு
3. லீவுப் பதிவேடு
4. குறுகிய லீவுப் பதிவேடு
5. தாமதமான வரவுப் பதிவேடு
6. இலவச புகையிரத
ஆணைச்சீட்டுப் பதிவேடு
7. பொருட்கள் பதிவேடு
8. மாணவர் சேர்வு இடாப்பு
9. ஆசிரியர்களுக்கு அதிபர் மூலம் விடுக்கப்படும் அறிவித்தல் குறிப்பேடு
வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்டவை
1. மாணவர் தினவரவு இடாப்பு
2. பாடக்குறிப்புப் பதிவேடு
3. மாணவர் பரீட்சைப் பெறுபேறு அட்டை
4. பாடத்திட்டங்கள்
5. பாட வழிகாட்டிகள் / ஆசிரியர் கைந்நூல்கள்
6. மாணவர் வெளிச்செல்லல் பதிவேடு
மேலே காட்டப்பட்ட பதிவேடுகளைவிட மேலும் பல பதிவேடுகள் செயற்பாடுகளை இலகு படுத்துவதன் பொருட்டு பேணப்படுகின்றன.
02. நிதிச் செயற்பாடு
பாடசாலைகளின் அனைத்துச் செயற்பாடுகளும் கண்டிப்பாக நிதியோடு தொடர்புபட்டவையே. பாடசாலைகளில் கற்பித்தல். நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளின் பொருட்டு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகின்றது. பாடசாலைகளில் நிதிச் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கும் பதிவேடுகள் பேணப்படுகின்றன.
அவற்றில் சில பின்வருமாறு:
01. மாதாந்த சம்பளப் பதிவேடு (Payment Register)
02. பொருட்கள் பதிவேடு (Inventory Book)
03. வசதிகள் சேவைக்கட்டணப் பதிவேடு (Facilities Fees Register)
04. வசதிகள் சேவைக் கட்டணப் பற்றுச்சீட்டு (C.100)
05. பண வரவு செலவுப் பதிவேடு (Cash Book)
இது போன்ற இன்னும் பல தேவைக்கேற்ப பயன்படுத்தப் படுகின்றன.
நிதிப் பகுதி ஒரு நீண்ட பகுதியாகும். அதனைத் தனியாகவே விளங்கவேண்டியுள்ளதால் இங்கு நாம் நிர்வாகப் பகுதி பற்றியே ஆராயவுள்ளோம்.
தினவரவுப் பதிவேடு (Attendance Register) பொது18
தினவரவுப் பதிவேட்டில் பெயர் எனக் குறிப்பிட்ட பகுதியில் வழக்கமாக ஆசிரியர்கள் கையொப்பமிட்டு அருகே நேரத்தைப் பதிவு செய்வது வழக்கம். தினவரவுப் பதிவேட்டில் பெயர் என்றுதானே தலைப்பிடப்பட்டுள்ளது. கையொப்பம் எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, பெயரை எழுதுவது தப்பில்லையே எனக் கேட்கலாம்.
தாபனக் கோவை அத்தியாயம் XXVIII பிரிவு 1:3 இன்படி சகல அலுவலர்களும் சேவைக்குச் சமுகமளித்தல் தொடர்பாக கையொப்பமிட்டு நேரத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, தினவரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவது கட்டாயம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் நேர காலத்துடன் வருவார்கள். ஆனால் அதிபர் சற்றுத் தாமதமாகவே வருவார். எனினும் அவருக்காகத் தினவரவுப் பதிவேட்டில் முதலாவது வரி ஒதுக்கப்பட்டிருக்கும். இது பல பாடசாலைப் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்ட விடயம். ஒவ்வொரு அலுவலர்களும் கடமைக்கு வரும் ஒழுங்கில் கையொப்பமிட வேண்டுமே தவிர ஒதுக்கீடு செய்யக்கூடாது. இது பற்றி தாபனக்கோவையின் அதே அத்தியாயத்தின் 1:3:1ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது.
பொதுவாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 7.30 மணி என அந்த நேரத்தை வரையறை செய்வதற்கு சிவப்புக் கோடு இடப்படுவது அவசியமாகின்றது. அப்போதுதான் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தின் பின் செய்ய வேண்டிய தொடரான கடமைகள்/ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
தாமதமான வருகையைப் பதிதல்
கல்விய அமைச்சின் இல. 1981/13 ,(Circular) சுற்று நிருபத்தின் படி தாமதமாக வரும் ஆசிரியர்களின் பெயர்கள் தாமதமான வருகைப் பதிவேட்டில் தினமும் பதியப்படல் வேண்டும். அரை மணித்தியாலத்துள் தாமதமான வருகைகள் 3 தடவைகள் பூர்த்தியான தினத்தில் உரிய ஆசிரியருக்கான லீவுப் பதிவேட்டுப் பக்கத்தில் அரை நாள் லீவைச் சமயோகித லீவாகப் பதிவதோடு லீவுக்கான காரணத்தை "தாமதமான வருகை" எனக் குறிப்பிடல் வேண்டும். இதே போல் அரை மணித்தியாலத்தின் பின் பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்களின் லீவுப் பதிவேட்டுப் பக்கத்தில் அன்றைய தினம் அரை நாள் லீலாகப் பதிந்து காரணத்தை "தாமதமான வருகை” எனக் குறிப்பிடல் வேண்டும்.
இங்கு கூறப்பட்ட அரை நாள் லீவுகளுக்காக லீவு விண்ணப்பப் படிவம் பெறத்தேவையில்லை. காரணம் லீவு என்பது உரிய ஆசிரியர் தாமாக முன் கூட்டி தமது தேவையின் நிமித்தம் பெறுவதே அவருக்குரிய லீவாகும். ஆனால் இது தாமதத்திற்கான தண்டனை என்பதால் லீவு விண்ணப்பம் தேவையில்லை.
ஆசிரியர்களின் தினவரவுப்பதிவேட்டின்படி ஆசிரியர்களின் வரவைப் பதிவதற்கு தினவரவு இடாப்பினை (கல்வி C-32) பயன்படுத்த வேண்டும். இதில் சமுகமளித்த ஆசிரியர் தொடர்பாக குறித்த தினத்திற்குரிய முதல் வரியில் 1 எனவும், சமுகமளிக்காத ஆசிரியர் தொடர்பாக 0 எனவும் அடையாளம் இடப்பட வேண்டும். முற்பகலில் சமுகமளித்த ஆசிரியர் ஒருவர் அரைநாள் விடுமுறையில் சென்றால், அவருக்கு பெயருக்கு முன்னுள்ள குறித்த தினத்திற்குரிய இரண்டாம் கூட்டினுள் சிவப்புப் பேனாவினால் 1/2 எனக் குறிப்பிடல் வேண்டும். முற்பகலில் அரைநாள் விடுமுறை பெற்ற ஆசிரியர் ஒருவர் பிற்பகல் பாடசாலைக்கு சமுகமளித்தால் முன்னரைப் போலவே இரண்டாம் கூட்டினுள் சிவப்புப் பேனாவினால் 1/2 எனக் குறிப்பிடல் வேண்டும். இறுதியில் வரவு மொத்தம் கணக்கிடப்படும் போது 1/2 நாள் சமுகமளித்த சந்தர்ப்பங்களும் தவறாது கருத்திற்கொள்ளப்பட வேண்டும். (க.அ.2008/39)
பாடசாலைக் கூட்டங்கள்
காலைக் கூட்டங்களுக்கு எல்லா ஆசிரியர்களும் கட்டாயம் சமுகமளித்தல் வேண்டும்.
"பாடசாலை நேரம் முடிந்ததும் மிகவும் பவ்வியமான/ ஒழுங்காக மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே செல்ல வேண்டும். அந்தந்த வகுப்பறையில் இறுதிப் பாடவேளையில் கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் வெளியேறும் வரை தரித்திருக்க வேண்டும். வகுப்பறையை விட்டு வகுப்பறையில் மாணவர்கள் வெளியேற முன்னர் சிறு தியானம் செய்தல் வேண்டும்." இங்கு சிறு தியானம் என்பது அவரவர் சமய அனுஷ்டானத்தைக் குறிக்கும். "மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும்போது பாடசாலையினுள் மாணவர்களுக்கு ஏதாவது "காயங்களோ, இழப்புக்களோ ஏற்பட்டால் அம்மாணவரின் வகுப்பறையில் இறுதிப் பாடவேளை கற்பித்த ஆசிரியரே பொறுப்புக் கூற வேண்டும்." (க.அ.198f/01)
பாடசாலை மேற்பார்வை
"அதிபரானவர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நேரசூசி, பொறுப்புகள், உபகரணங்கள் என்பவற்றை வழங்கும் போது எழுத்து மூலம் ஒப்பமிட்டு வழங்க வேண்டும். அதே போல ஆசிரியர்கள் பாடக்குறிப்பு, பாடப்பதிவு போன்றவற்றை அதிபரின் மேற்பார்வைக்கு தேவையான போது சமர்ப்பிக்க வேண்டும்."
“எந்தவொரு வகுப்பு மாணவருக்கும் நேரசூசிகையில் "ஓய்வுப்பாட வேளை" உள்ளடக்கப்படக்கூடாது. அதற்குப் பதில் வழங்கும் முறைமை இருத்தல் வேண்வேண்டும்.
தேவையானபோது அவசியமான மூலத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். மூலத் தரவு என்பது அந்நாளுக்குரிய பாடசாலைக்கு சமுகமளித்த மாணவர் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் வரவு, நிர்வாகக் கட்டமைப்பு, பொதுப் பெறுபேறு, நேரசூசி, பாட பரீட்சைகளின் ஒதுக்கீட்டுக் கிரயம், வருடாந்த வேலைத்திட்டம் என்பனவாகும். இந்தத் தரவுகளைப் பகுத்து காட்சிப்படுத்தல் வேண்டும். வகுப்பு இடாப்புக்கள், புள்ளிப் பதிவு. மாணவர் அனுமதிப் பதிவு என்பன சரியாக பூரணப்படுத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படல் வேண்டும். வரவு இடாப்புக்களின் வரவுச் சுருக்கம் வகுப்புக்களின் எண்ணிக்கைப் பிரகாரம் வருட இறுதியில் கணக்கிடப்பட்டு பதியப்படல் வேண்டும்.''
மேலே காட்டப்பட்ட விடயங்களையே பாடசாலைக்கு விஜயம் செய்யும் குழுப் பரிசோதனைக்கான அதிகாரிகள் எதிர்பார்ப்பார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.
“கோட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி அதிபர்கள்/ ஆசிரியர்கள்/ மாணவர்கள் தங்களது சேவையை பிற /வேறு, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு, தனிப்பட்ட தாபனங்களுக்கு வழங்குதல் கூடாது."
"பாடசாலையின் சம்பவக் குறிப்புப் புத்தகத்தில் (Log Book) குறிப்பொன்றினை/பதிவொன்றினை இடாது அதிபரோ ஆசிரியரோ பாடசாலை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவ்வாறான சம்பவக்குறிப்பில் பதில் ஒழுங்குகள் பற்றிக் குறிப்பிடப்படல் வேண்டும்." இவ்விடயங்களில் அதிபர்களும் ஆசிரியர்களும் கவனம் செலுத்துவது மிக அவசியமாகும். (க.அ.17/91)
மாணவரின் கட்டுக்காப்பு
"தங்களது பாடசாலையில் கல்வி பயிலும் பிள்ளைகள் பாடசாலைக்கு வந்த நேரம் தொடக்கம், பாடசாலை பாடசாலை வளவை விட்டு வெளியேறும் வரைக்கும், அப்பிள்ளையின் பாதுகாப்பிற்கு கூட்டாகவும் தனியாகவும் அந்தந்த பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் பொறுப்பானவர்கள். பாடசாலையின் இயல்பான தொழிற்பாடுகளில் தொடர்புள்ள வேலைகளுக்கு அன்றி வேறொரு நோக்கத்திற்காகவும் எவ்வித சூழ்நிலையிலும் பாடசாலை விட்டு மாணவர் வெளியேற அனுமதிக்கப்படலாகாது." (1960/13)
"பாடசாலையிலுள்ள எல்லா மாணவர்களும் பாடசாலை நடைபெறும் நேரம் முழுவதும் தங்கியிருத்தல்/இருத்தல் வேண்டும். யாதாயினும் அத்தியாவசியத் தேவை காரணமாக, ஒரு மாணவன் பாடசாலையிலிருந்து வெளியே செல்ல அனுமதி கேட்கும் சந்தர்ப்பத்தில், அத்தேவை பற்றி உறுதி செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள தனியானப் பதிவேட்டில் மாணவரின் பெயர், வெளியேறும் நேரம், அதற்கான காரணம் என்பன குறிக்கப்பிட்டு அதிபரின் / அதிபரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் வெளியேற இடமளிக்க முடியும். மேலும் யாதாயினும் மாணவர் குழுவுக்கு மதக்கியைகளை செய்வதற்கு அவசியப்படின் அதற்கான வசதிகள் பாடசாலை மூலம் செய்து கொடுக்கப்படல் வேண்டும்." (க.அ..2008/39)
பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள்
"பாடசாலையின் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்களை தமது பாடசாலையில் வைத்திருக்கும் பாடசாலை அதிபர்களின் சம்பளத்தில் அவ்வாசிரியர்களின் சம்பளம் கழிக்கப்படும்." என்ற அறிவித்தலையும் கவனத்தில் கொள்ளவும். (க.அ.15/1981)
சம்பவத் திரட்டுப் பதிவுப் புத்தகம்
பாடசாலையின் முக்கியமான நிகழ்வுகள் தினந்தோறும் பதியப்படல் வேண்டும். ஒரு படகோட்டிக்கு சுக்கானுடைய முக்கியத்துவம் எதுவோ அதுபோல் ஒரு பாடசாலை அதிபருக்கு சம்பவத் திரட்டுப் பதிவுப் புத்தகம் மிக மிக அவசியம்.
பின்வரும் பதிவுகள் சம்பவத்திற்கு புத்தகத்தில் இடம்பெறுதல் கட்டாயமாகும்.
- பாடசாலை ஆரம்பித்த நேரம் / விடுகை நேரத்தில் மாற்றம் இருப்பின்.
- பாடசாலை நேரத்தில் அதிபரோ ஆசிரியரோ பாடசாலையை விட்டு வெளிச் செல்லல்
- குறுகிய லீவில் அதிபர்/ ஆசிரியர்கள் செல்லல்,
- கல்வி அலுவலகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கடமை ரீதியாகப் பாடசாலைக்கு விஜயம் செய்தல்.
- புதிய நியமன ஆசிரியர்கள்/ இடமாற்றத்தில் வரும் ஆசிரியர்கள்/ இணைப்புச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடமையைப் பொறுப்பேற்றல் தொடர்பான குறிப்பு
- இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் விடுவித்தல்/ பொருட்களை மீள ஒப்படைத்தல் தொடர்பான குறிப்பு
- அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு லீவில் செல்லும்/ லீவை முடித்து விட்டு மீண்டும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் கடமைப் பொறுப்பேற்கும் ஆசிரியர் தொடர்பான குறிப்பு
- பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய திடீர் விபத்துக்கள் தொடர்பான குறிப்பு
- அனுமதிக்கப்பட்ட பிரசவ லீவில் செல்லும் ஆசிரியைகள்/ பிரசவ லீவு முடிந்து சேவைக்குத் திரும்பும் ஆசிரியைகள் தொடர்பான குறிப்பு
- பாடசாலை விடுதிகளில் குடியிருக்க அனுமதி பெற்ற கடிதக்குறிப்பு/ விடுதியை மீள ஒப்படைத்தல் பற்றிய குறிப்பு
- ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள் பற்றிய குறிப்பு
- பாடசாலையில் திருட்டுக்கள் நடைபெற்றிருந்தால் அது பற்றிய குறிப்பு
- தகுந்த காரணத்தால் பாடசாலையை மூட வேண்டிய தேவை ஏற்படின் அது பற்றிய குறிப்பு
குறிப்பு :
பாடசாலை அதிபர்கள் கடமை/ தனிப்பிட்ட விடுமுறையில் செல்லும்போது தமது கடமைப் பொறுப்பை பிரதி அதிபரிடம் ஒப்படைக்கும்போது கட்டாயமாக சம்பலத்திரட்டுப் பதிவேட்டில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வாறே பிரதி அதிபர்களும் சம்பவத்திரட்டுப் பதிவேட்டில் குறிப்பிடாத எச்சந்தர்ப்பத்திலும் அதிபரின் கடமைப்பொறுப்பை தாம் செய்வதற்கு முற்படக்கூடாது.
ஆசிரியர்களுக்கான சலுகைகளும் உரிமைகளும்
ஆசிரியர்களின் நியமன நிபந்தனைகளுக்கு மேலதிகமாக அரசினால் வழங்கப்படும் வசதிகளே சலுகைகளும், உரிமைகளுமாகும்.
நியமனம்
நியமன அதிகாரியினால் குறித்த' பதவி தொடர்பாக எழுத்து மூல அறிவித்தலே நியமனக் கடிதமாகும். நியமனக் கடிதத்தில் இடம் பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
நியமனக் கடித இலக்கமும், திகதியும்
எந்தவொரு கடமை ரீதியான கடிதத்திலும் அது நியமனம், மாகாண சபைக்கு உள்ளீர்த்தல் மற்றும் பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற விடயங்களாயினும் அன்றி வேறு கடமை ரீதியான கடிதங்களாயினும் முக்கியமானது கடித இலக்கமும் திகதியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
குறிப்பிட்ட பதவிக்கான தலைப்பு
நியமனம்.
- பதவிப் பெயர், தரம்
- செயற்படும் திகதி
- சேவையாற்றும் நிலையம்
நியமன நிபந்தனைகள்
- இப்பதவி நிரந்தரமானதும், ஓய்வூதியமுடையதுமாகும்.
- விதவைகள் / தபுதாரர், அனாதைகள் ஓய்வூதியப் பங்களிப்பு மாதாந்தம் செலுத்த வேண்டும்.
- வேறு நிறுவனங்களில் கடமை புரியக்கூடாது.
- இப்பதவி 3 வருடகால தகுதிகாண் காலத்தைக் கொண்டது.
- உடல் ஆரோக்கியம் தொடர்பாக பொது 169 படிவத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படல்.
- இலங்கை குடியரசுக்கு விசுவாசமான சத்தியப்பிரமாணம்.
- பொது 161 இல் சொத்துக்களின் பிரகடனம்.
குறிப்பு :
தகுதிகாண் காலத்தினுள் மேற்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், மருத்துவப் பரிசோதனையில் தொழிலுக்கு தகுதியற்றவர் என சிபாரிசு செய்யப்பட்டால், கல்வித்தகைமைகளில் தகுதியின்மை காணப்பட்டால். எதாவது பாரதூரமான குற்றச்செயல்களில் குற்றவாளியாகக் காணப்பட்டால். தமது தகவல்களில் ஏதாவது பொய்க்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தால் பதவியிலிருந்து நிறுத்தப்படலாம்.
முதல் நியமனத்திகதி
ஒரு பதவி நியமனக் கடிதம் கிடைத்து அப்பதவியைப் பொறுப்பேற்று கடமைக்கு சமூகமளித்துக் கையொப்பமிடும் திகதி/ முதல் நியமனத்தைப் பொறுப்பேற்றதன் பேரில் சம்பவக்குறிப்பேட்டில் குறிப்பெழுதும் திகதி முதல் நியமனத்திகதியாகக் கொள்ளப்படும். (பாடசாலையில் முதன் முதலில் கடமையேற்கும் திகதியே முதல் நியமனத் திகதி ஆகும்)
இதற்கு மாற்றமாக நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பதவி செயற்படும் திகதியை முதல் நியமனத்திகதியாகக் கொள்ள முடியாது.
உதாரணமாக :-
A- தனது பதவியை உரிய சேவை நிலையத்தில் பொறுப்பேற்ற திகதி 2016.07.08ஆம் திகதியாகும். (வெள்ளிக்கிழமை)
B- தனது பதவியை உரிய சேவை நிலையத்தில் பொறுப்பேற்ற திகதி 2016.07.11ஆம் திகதியாகும். (திங்கட்கிழமை)
C- தனது பதவியை உரிய சேவை நிலையத்தில் பொறுப்பேற்ற திகதி 2016.07.13ஆம் திகதி (புதன்கிழமை)
மேற்படி உதாரணத்தில் ஒரே பதவியில் மூவரும் கடமை ரீதியாக பொறுப்பேற்ற திகதி வேறுபட்டதனால் அந்தந்த திகதிகளே அவர்களின் முதல் நியமனத்திகதியாகும். இதனால் A என்பவர் B வை விட 3 நாட்கள் சேவையில் மூத்தவர்.C யை விட 5 நாட்கள் சேவையில் மூத்தவர். இதன்படி ஒவ்வொருவரின் வருடாந்த சம்பள ஏற்றத்தினங்கள் வேறுபடுகின்றன.
சலுகைகளும் உரிமைகளும்
சலுகை என்பது சுற்று நிருபங்கள் மூலம் அவ்வப்போது இரத்துச் செய்யப்படலாம் அல்லது மாற்றப்படலாம். அவ்வாறே சலுகையை வழங்கும் அதிகாரி தேவை ஏற்படும் போது வழங்கப்பட்ட சலுகையைக் குறைக்கவோ, இரத்துச் செய்யவோ முடியும்.
ஆனால் உரிமை என்பது இலங்கைக் குடியரசின் பாராளுமன்றத்தினால் சட்டவாக்கத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதாகும். எனவே சட்டரீதியான உரிமையை எவராலும் மாற்ற முடியாது. உரிமை மறுக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாட முடியும்.
சலுகைகள் சில பின்வருமாறு:
- லீவு
- இலவசப் புகையிரதப் பருவச்சீட்டு
- விடுமுறை புகையிரதப் பிரயாணம்
- கடன்கள்
- அரச இல்லங்கள்
- சுற்றுலா பங்களா
- அக்ரஹார காப்புறுதி
- விபத்து நட்டஈடு
- புலமைப்பரிசில்
- விழா முற்பணம்
- தொழிற்சங்கச் சலுகை
- அரசியல் உரிமைகள்
- தொழிற்சங்க உரிமைகள்
Retired F.A. 1 (Acct)