"புத்தளம் தொகுதியில் முதலாவது அரசினர் பாடசாலையாக கரைதீவு அரசினர் பாடசாலையை கருதலாம்" என பேராசிரியர் கலாநிதி எம் எஸ் எம் அனஸ் அவர்களின் 'புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்' என்ற நூல் கூறுகிறது. புத்தளம் மாவட்டத்தில் ஆரம்ப காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தாய்மொழி மூலம் அரச பாடசாலை கரைத்தீவு கிராமத்தில் அமைந்துள்ளது என மர்ஹும் N.M. ஷாஜகான் அவர்களின் "புத்தளம் வரலாறும் மரபுகளும்" என்ற நூல் கூறுகின்றது. கிடைத்த தகவல்களின் பிரகாரம் கரைத்தீவு ஆரம்ப பாடசாலையாக 1913ஆம் ஆண்டு ஆணி திங்கள் இரண்டாம் (2ம்) நாள் தொடங்கப்பட்டது. இன்றைய எமது கல்வி வலயத்திற்குட்பட்ட புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயம், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் என்பன இக்காலப் பகுதிக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாடசாலைகள் ஆகும். Frank Modder அவர்களுடைய Gazetteer of the Puttalam District (1908) பதிவுகளின் பிரகாரம் புளிச்சாக்குளம், உடப்பு ஆகிய கிராமங்களில் அக்காலப்பகுதியில் சிலாபம் நிர்வாக மாவட்ட பிரிவுகளுக்குள் உட்பட்டிருந்தன. இந்த வகையில் நோக்கும் போது கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்தளம் பிரதேசத்தின் முதலாவது அரச தமிழ் மொழிமூல பாடசாலை ஆக இருக்கலாம் என 02-06-2013 ம் திகதி அப்போதைய உதவிக் கல்விப் பணிப்பாளர் Z.A. ஸன்ஹிர் அவர்கள் பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பொன்றை எழுதியுள்ளார். கரைத்தீவு கிராமம் கற்பிட்டி D.R.O நிர்வாகத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில் இப் பாடசாலைக்கு வருகை தந்த D.R.O விடம் கரைத்தீவுப் புலவர் ஷேகு அலாவுதீன் தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் இவ்வாறு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
".... பள்ளிக்கூடத்தை தங்கள் கண்ணை
விழித்துப் பாரு மன்னே....!
புழுதி கிளம்பலாச்சு
பிள்ளைகளின் நாசிகள் தூசியும் - ஆச்சே
தண்ணீரில்லா முடையால் - உபாத்திரமார்கள்
தங்க முடியாது பங்கமதனால் -
எண்ணியே மாறிப்போனார்கள்
நாங்கள் எல்லோரும் - என்ன விதமாய்
கல்வி கற்கிறதோ
ஆசீர்வதிக்க கடனே துரையே...! - இந்த
அவமதி நீக்க உதவி செய்திடுமே
பாசமுடன் கவிசொன்னேன்
ஷேகுலாவுதீன் பிரான்சிஸ்
பர்னாந்துக்கருள் புரியுங் - கோனே....."
இவ்வாறு கூறிய புலவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரான்சிஸ் பர்ணாந்து அதிபராக இருந்த போது, தற்போது பாடசாலை அமைந்துள்ள உப்புவிளை நிலங்களுக்கும் தென்னந் தோப்புக்களுக்கு மத்தியிலே மனோரம்மியமான அமைதியான சூழலிலே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 80'X20' அளவுள்ள முதல் நிரந்தரக் கட்டிடம் தலைநிமிர்ந்து. முதலாவதாக தீர்மானிக்கப்பட்ட கட்டிடத்திற்கு "புலவர் ஷேகு அலாவுதீன்" அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1997-08-09 இது திகதியில் 1C தரம் பெற்ற கல்விக்கூடம் தனது கல்விப் பணியில் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நூலகம், கணணி கற்கை நிலையம், பல்லூடக கற்கை நிலையம், விஞ்ஞான அரை அடங்கலாக பாதையின் மேற்குப் புற நிலப்பரப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டு 11 நிரந்தர கட்டடங்கள் கம்பீரமாய் காட்சி அளிக்கின்றன. அன்று முதல் இன்றுவரை உன்னதமான கல்வி மூலம் சிரேஷ்டமான பிள்ளையை உருவாக்குதல் என்ற தூர நோக்குடனும் சமூகம் வேண்டி நிற்கும் ஆளுமைகளை உருவாக்குதல் என்ற இலட்சியக் கனவு நடைபோடுகிறது எமது கலையகம்.
இப்பாடசாலை 11 பட்டதாரிகள் ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட/டிப்ளோமா(கற்பித்தல்) விஞ்ஞான ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட ஒரு கணித பாட ஆசிரியர் உற்பட 48 ஆசிரியர்களையும், இரு வைத்தியர்கள் உட்பட நான்கு துறைசார் நிபுணர்களையும் 26 அரங உத்தியோகத்தர்களையும், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பட்டதாரி இருவர் உட்பட 23 பட்டதாரிகளையும் CIMA, Charted Accountants, AAT, Auto Card, QS, IT போன்ற நெறிகளை பூர்த்தி செய்தவர்களையும் உருவாக்கியுள்ளது. இவர்களுள் சவுரிச்செட்டி கப்ரியல்பிள்ளை முதல் ஆசிரியரும், விவசாய-கால்நடை துறை சார்ந்த A. அசிஸ் முதல் துறைசார் நிபுணரும், முன்னாள் அதிபர் மர்ஹுமா M.S. பரீனா ஊரின் முதல் பட்டதாரியும், பெண் அதிபரும் ஆவார்கள். இக்கல்விக்கூடம் உருவாக்கிய முதல் பட்டதாரி A.W. சனூசியா ஆவார். இப் பாடசாலை, சமகாலத்தில் தனது கல்விப் பணியில் 100 வருடங்களை தாண்டிய நிலையில், A.K. நஜிமுல்லாஹ் அவர்களின் தலைமையில் 38 ஆசிரியர்கள் கல்வி பணிபுரிய தரம் 1 தொடக்கம் உயர்தரம் கலைப் பிரிவு வரை 481 ஆண்களும் 476 பெண்களுமாக மொத்தமாக 957 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டி நிற்கும் ஆளுமைகளை உருவாக்குதல் என்ற Mission உடன் தனது இலக்கினை நோக்கி கம்பீரமாக இக்கழகம் முன்னேறிக் கொண்டு செல்கின்றது. அதன் அடிப்படையிலேயே தற்காலத்தில் இப்பாடசாலை நேரடி கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஒரு தேசிய பாடசாலையாக மென்மேலும் வளர்ச்சி அடைந்து வர இருக்கிறது.

1913-1923
திரு. N. ஜோசப் அல்பிரட் மாற்றலாகிச் சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தில் திரு E.B. டென்ஹாம் 1917.12.14 தொடக்கம் 1919.12.31 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து திரு E.H.W. Andoaveal என்பவர் 1920.01.16 ஆந் திகதி தொடக்கம் 1920.02.19 வரையான ஒரு மாதகாலம் மாத்திரம் அதிபராக கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து திரு. S.S.J. வரதனம் 1922.02.19 தொடக்கம் 1924.11.16 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார். இதன் பிறகு 1924.11.16 இலிருந்து 1929.12.31 வரையான காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர்களுடைய சரியான விபரம் தெரியவில்லை. இக்காலப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிபர்கள் பொறுப்பேற்றிருக்கலாம் என ஊகிக்க கூடியதாக உள்ளது.
1930 - 1962
திரு. பிரான்ஸிஸ் பெர்னாந்து என்பவர் 1930.01.01 தொடக்கம் 1940.05.10 வரை இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றதோடு, 1930 இல் சங்கமடுவத்திலிருந்து தற்போதுள்ள மனோரம்பியமான, அரசுக்குச் சொந்தமான சூழலிற்கு பாடசாலை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து திரு. S.J. சிவசம்பு 1940.11.06 ஆந் திகதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். 1947 இல் கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆறாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் வெகுவாக நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து மேற்படிப்புக்காக ஆர்வமுள்ளவர்கள் கற்பிட்டியை நாடிச் சென்றனர் என பிராந்திய முஸ்லிம் கலாசார விழாமலர் (1992) கூறுகின்றது.
“வெளியூர் சென்று கற்க வசதி இல்லாத நானும் என்னைப் போன்றவர்களும் இறுதிவரை கரைத்தீவு பாடசாலையிலேயே கற்றோம். தலைமை ஆசிரியராக இருந்த திரு. சிவசம்பு எங்களுக்கு அன்பாக அறிவுரைகள் வழங்கியதோடு, பாடமும் சொல்லித் தந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் கற்ற எனக்கு ஒரு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஆளுமையையும் ஆற்றலையும் தந்தது இந்தப் பாடசாலை ஆகும். நான் வெளியூர் சென்று கற்குமளவுக்கு எனது பெற்றோர்கள் பொருளாதார வசதியைப் பெற்றிருக்கவில்லை. நான் என்றும் இப்பாடசாலைக்கு கடமைப்பட்டுள்ளேன்.” எனகின்றார். வண்ணாத்திவில்லு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஆர். என். அசனா மரைக்கார்.
திரு. S.J. சிவசம்பு 1950.01.31 வரை கடமையாற்றியுள்ளார். பின்னர் திரு பாக்கியம் 1950.02.01 இல் அதிபராக கடமையேற்றுள்ளார். இவர் 1951.04.30 ஆந் திகதி வரை கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் திரு A.S. நல்லையா 1951.04.30 தொடக்கம் இப்பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1953.12.17 வரை கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் S.N.J. ரத்னசாமி 1954.01.04 தொடக்கம் அதிபராகப் - பொறுப்பேற்று 1956.06.30 வரையும் எமது பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து K.A.S. அலி 1956.06.30 தொடக்கம் அதிபராகப் பொறுப்பேற்று 1957.04.29 வரை கடமையாற்றினார். அதன் பின்னர் S. தம்பு 1957.05.06 இலிருந்து 1958.01.17 வரை அதிபராக பொறுப்பேற்றுக் கடமையாற்றினார். தொடர்ந்து 1958.01.17 இலிருந்து பிச்ச மாஸ்டர் என அழைக்கப்பட்ட S. கப்ரியல்பிள்ளை தற்காலிகமான அதிபராக கடமையேற்றுள்ளார். இவர் குறுகிய காலத்திற்கு 1958.09.01 வரையே அதிபராக கடமையாற்றினார்.
1958 இன் பின்னர்தான் பாடசாலையின் வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பத்தை அவதானிக்க முடிகிறது. தொடர்ந்து குருநாகல் - U.L.M. அஷ்ரப் 1958.09.01 தொடக்கம் எமது பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அத்தோடு ஆரம்பப் பாடசாலையாக இயங்கி வந்த இப்பாடசாலை 1961 இல் சிரேஷ்ட பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு, S.S.C வரை வகுப்புக்கள் நடாத்தப்பட்டு, அரசாங்கப் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்றினர். U.L.M. அஷ்ரப் இப்பாடசாலையை மிகவும் சிறப்பான முறையில் நிர்வாகித்து வந்ததாக அக்காலப்பகுதில் கற்று, 1961ல் S.S.C அரச பொதுப் பரீட்சைக்காக முதன் முதலில் தயார் செய்யப்பட்டு, பரீட்சைக்குத்தோற்றிய மர்ஹூம்களான “சாச்சா” - மீரா சாஹிபு மரைக்கார், அபூக்கர், கபூர், கல்லடி சாஹிபு ஆகியோர் வாழ்ந்த காலங்களில் நினைவுபடுத்தி உள்ளார்கள். 1965 இல் க.பொ.த. (சா/த)ப் பரீட்சைக்குத் தோற்றி, முதன் முதலாக, ஒரே முறையில் சித்தியடைந்த மாணவர் என்ற வகையில் M.S.A. அஸீஸ் குறிப்பிடக்கூடியவராய் விளங்குகின்றார். இவர் பிரதேச உதவி விவசாயப் பணிப்பாளராகப் கடமையாற்றி, எமது பாடசாலையின் பெருமைக்கு வழி வகுத்தனர். ஜனாப் U.L.M. அஷ்ரப் 1962.12.28 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார்.
1963-1977
1963.01.01 இல் ஜனாப் H.M. சேகுலாவுத்தீன் தற்காலிகமான அதிபராக கடமையேற்று, 1964.01.31 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார். இதன் பின்னர் எமது ஊரைச் சேர்ந்த ஜனாப் K.M.A. அஸீஸ் 1964.01.31 தொடக்கம் தற்காலிக அதிபராக கடமையை ஏற்று, 1964.03.10 ஆம் திகதி வரை குறுகிய காலத்திற்கு அதிபராக கடமையாற்றியுள்ளார். அடுத்து ஜனாப் M.T.M. ஸஹாப்தீன் 1964.03.16 அன்று அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1964.08.12 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார். பின்னர் புத்தளம் - ஜனாப் A.K.A. அனிபா 1964.08.31 இல் அதிபராகக் கடமையேற்றுள்ளார். இவர் 1968.06.30 வரை பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் எமது ஊரைச் சேர்ந்த A.L. ஹாலித் மரைக்கார் 1968.07.03 தொடக்கம் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1968.09.01 வரையும் அதிபராக கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் K.M.A. அஸீஸ் 1968.09.01 இல் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1969.05.15 வரை கடமையாற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து புத்தளம் - A.M.S. இப்றாஹிம் 1969.05.15 இல் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்று சொற்ப நாட்களில் 1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் நாள் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமானார். பின்னர் ஜனாப் K.M.A. அஸீஸ் 1969.06.15 தொடக்கம் 1970.06.30 வரையும் அதைத் தொடர்ந்து ஜனாப் A,L. ஹாலித் மரைக்கார் 1970.06.30 தொடக்கம் 1971.07.31 வரையும் அதிபராக கடமையாற்றியுள்ளனர்.
தொடர்ந்து புத்தளம் - A.K. ஜஃபர் 1971.07.31 இல் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். A.K. ஜஃபர் பாடசாலையை மிகவும் சிறப்பான முறையில் நிர்வகித்ததாக அக்காலப்பகுதியில் கற்று இன்று அரச உத்தியயோகங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு, நல்ல நிலையிலிருக்கும் அவரது மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். “A.K. ஜஃபர் அவர்களின் வழிகாட்டலில் 1972 இல் க.பொ.த. (சா.த)ப் பரீட்சைக்கு தோற்றிய நான் ஒரே முறையில் 6ஊ சித்திகளுடன் எட்டுப் பாடங்களிலும் சித்தியடைந்தேன். தொடந்து புத்தளம் ஸாஹிராக் கல்லுாரியில் உயர்தரம் கற்பதற்கு அவர் எனக்கு வழிகாட்டினார்." என அவருடைய மாணவன் ஏ.எம். சரிப்த்தீன் கூறுகின்றார். இப்பாடசாலையின் வளர்ச்சியிலே இவரின் காலப்பகுதி ஒரு மைல் கல்லாகும் எனவும் நினைவுகூருகின்றனர். இவரது காலத்தில் 400 மாணவர்கள் வரை கல்வி கற்றதோடு, 15 ஆசிரியர்களும் கடமையாற்றியுள்ளனர். அத்துடன் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளும் கிடைத்ததோடு விளையாட்டு மற்றும் கலைத்துறைகளிலும் எமது பாடசாலை புத்தளம் பிரதேசத்தில் சிறப்பு பெற்றிருந்தது. இவர் 1977.11.01 வரை அதிபராக கடமையாற்றினார்.
இவரைத் தொடர்ந்து A.L. ஹாலித் மரைக்கார் 1977.11.01 இல் அதிபராகப் பொறுப்பேற்று, 1978.01.27 வரை அதிபராக கடமையாற்றியுள்ளார். ஜனாப் A.L. ஹாலித் மரைக்கார் எமதுார் மாணவர்களின் எண்கணித அறிவு விருத்திக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1978-1990
K.M.A. அஸீஸ் 1978.01.27 இல் அதிபராகப் பொறுப்பேற்று, 1990.07.09 வரை கடமையாற்றியுள்ளார். பாடசாலையின் கல்வித் தரத்தை மேலும் மெருகூட்டியுள்ளார். செயலற்றுக் கிடந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு இவரது காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கான சகல வழிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவரின் நிர்வாகத்தின் கீழ் இடப்பட்ட அத்திவாரத்தில் 1988 இல் க.பொ.த.(சா/த)ப் பரீட்சையில் சித்தியடைந்த ஏ.சீ. பர்ஸீன், ஏ.ஏ. பெய்ரோஸ் ஆகியோர் இன்று பட்டதாரி ஆசிரியர்களாவர். 1989 இல் க.பொ.த.(சா/த)ப் பரீட்சையில் சித்தியடைந்த எம்.ஏ.எம். அர்ஷாத் வர்த்தகப்பட்டதாரி ஆவார். 1992 இல் 12 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி, 9 பேர் பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஏ.எச். அஸ்கியா சிறப்புக் கலை பட்டதாரி ஆவார்கள். இவரின் காலம் பாடசாலை வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனலாம். ஜனாப் K.M.A. அஸீஸ் அவர்களைத் தொடர்ந்து ஜனாப் A.L. ஹாலித் மரைக்கார் 1990.07.09 இல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-2000
A.L. ஹாலித் மரைக்கார் 1991.01.01 வரை கடமையாற்றி, ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஊரின் முதல் பட்டதாரி என்ற பெருமைக்குரிய மர்ஹும் M.S. பரீனா நஸீர் 1991.01.01 தொடக்கம் தற்கால அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1995.05.02 எம். வரை அதிபராகக் கடமையாற்றிய இவரது காலத்தில் மாணவர் தொகை அதிகரிப்பு, ஆசிரியர் தொகை அதிகரிப்பு, நிரந்தர கட்டடங்களின் அதிகரிப்பு என்பன குறிப்பிட வேண்டிய விடயங்களாகும். A.H.M. அஸ்வர் கட்டடம், M.N. காதர் சாஹிபு மரைக்கார் கட்டடம், IQ விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன இவரது காலத்தில் பெறப்பட்டவையாகும். இவரது காலத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு கல்வி வளர்ச்சியுடையதாக பாடசாலை விளங்கியது. ஏறக்குறைய 500 இற்கு மேற்பட்ட மாணவர்களுடன் 20 வரை ஆசிரியர்களும் காணப்பட்டனர். கல்வி வளர்ச்சியின் முக்கிய படியாக 1995 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர கலைப்பிரிவு உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டு, ஏழு மாணவர்கள் L. பிரத்தியேகமாகப் பரீட்சைக்குத் தோற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் எருக்கலம்பிட்டி M.M.ராசிக் 1995.05.02 தொடக்கம் 1999.11.26 வரைக்கும் அதிபராக பொறுப்பேற்று கடமையாற்றினார். இவரது காலத்தில் சிரேஷ்ட வித்தியாலயமாக இருந்த எமது பாடசாலை மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு, பு/கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் என்ற பெயரோடு ஒளிவிட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. பாடசாலையை தரமுயர்த்துவதற்கு பக்கபலமாக நின்ற வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் அப்போதைய தலைவர் R.N. அசனா மரைக்கார் மற்றும் வடமேல் மாகாணசபை உறுப்பினராக இருந்த MHM. நவவி ஆகியோரை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இவரது காலத்தில் ஏறக்குறைய 600 மாணவர்கள் வரை கற்றதோடு, 15 ஆசிரியர்களும் கடமையாற்றினர். அத்துடன் 1997 - இல் உத்தியோகபூர்வமாக உயர்தர வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக க.பொ.த(உ/த)ப் பரீட்சைக்கு பாடசாலைப் பரீட்சார்த்திகளாக மாணவர்கள் தோற்றினர். இவரைத் தொடர்ந்து சங்கட்டிக்குளம் H.A. முஹ்தார் 1999.11.29 தொடக்கம் பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் நவோதயா செயற்றிட்டத்தின் மூலமாக இரு கணனிகள், மல்டிமீடியா அலகு போன்ற நவீன பௌதீக வளங்களைப் பாடசாலை பெற்றுக்கொண்டது. "பௌதீகவள அபிவிருத்தியினுாடாக பாடசாலை அபிவிருத்தி ” என்ற தொணிப்பொருளின் அடிப்படையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுத்த H.A. முஹ்தார் 2002.05.02 ஆந் திகதி வரை அதிபராக கடமையாற்றினார்.
தொடர்ந்து ஊரைச் சேர்ந்த A.A. பாரிஸ் முகம்மத் தற்காலிக அதிபராக கடமையேற்றார். இவர் குறுகிய காலத்திற்கு 2002.06.10 வரையுமே அதிபராக கடமையாற்றினார். அடுத்து எமது பாடசாலைக்கு கற்பிட்டி A.M. ஜவாத் 2002.06.10 அன்று அதிபராக பொறுப்பேற்றார். இவர் தனது கடமையை மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி சென்றார். இப்பாடசாலையின் வளர்ச்சியிலே A.M. ஜவாத் அவர்களின் காலம் மற்றுமொரு மைல் கல்லாகும் என்றால் அது மிகையாகாது. அவரது காலத்தில் கற்றலுக்குரிய உயிரோட்டமான சூழல், ஆசிரியர் தொகை அதிகரிப்பு, கணனி கற்கை நிலையம், நூலகம், பள்ளிவாசல், அலுவலக ஒழுங்கமைப்பு என்பன குறிப்பிட வேண்டிய அம்சங்களாகும். இவரது காலத்தில் 750 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றதோடு, 24 ஆசிரியர்கள் வரை கடமை கடமையாற்றினர். சிறந்த பரீட்சை பெபேறுகள் கிடைத்ததோடு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் இப்பாடசாலை புத்தளம் கல்வி வலயத்தில் சிறப்பு பெற்றிருந்தது. இவரது காலத்தில் பாடசாலையில் பௌதீகவள அபிவிருத்தியும், கல்வி அபிவிருத்தியும் சமாந்தரமாக வளர்ச்சியடைந்தது. பாடசாலையின் கல்வித்தரத்தை மேலும் மெருகூட்டினார். இவரால் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கான சகல முயற்சிகளும் முடிக்கிவிடப்பட்டன. 2006ம் ஆண்டு 05 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 05 பேரும் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுள் A.W. சனூசியா பாடசாலையிலிருந்து முதன் முறையாக பல்கலைக்கழகம் சென்றார். 2007, 2008 களில் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் அதிபர் ஜவாத் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போது செயற்றிட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்போடு செயலாற்றிய ஆசிரியர் A. அயாஸ்கான் நினைவுபடுத்தப்பட வேண்டியவர். இன்று வரை 5ம் தரப்புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தொடர்ச்சியாக சித்திபெற்று வருவதை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். A.M. ஜவாத். "கற்றலுக்குரிய உயிரோட்டமான சூழலை உருவாக்கு வதனூடாக பாடசாலையில் மாற்றத்தை ஏற்படுத்தல்." என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுத்தார்.
இவர் 2009.03.24 வரை அதிபராக கடமையாற்றினார். இவரைத் தொடர்ந்து ஊரைச் சேர்ந்த A.A.பாரிஸ் முகம்மத் 2009.03.24 திகதி இப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடைய காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வளர்ச்சியுடையதாக பாடசாலை விளங்கியது. அதிபர் ஏ.எம். ஜவாத் ஆரம்பித்த 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை விஷேட செயற்திட்டத்தை அதிபர் ஏ.ஏ. பாரீஸ் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றபோது 2009, 2010, 2011, 2012 ஆகிய காலப்பகுதியில் நல்ல அடைவைக் காணக்கிடைத்தது. "சாதனை படைத்த மாணவர்களுக்கு தரமான, பெறுமதியான பரிசில்களை வழங்கி ஊக்கிவிப்பதனூடாக பாடசாலையில் கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தல்." என்ற கருப்பொருளின் அடிப்படையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுத்த A.A.பாரிஸ் முகம்மத் அவர்களின் காலத்தில்தான் பாடசாலை வரலாற்றில் முதலாவது மேல்மாடிக் கட்டடத்திற்கான அடித்தளமிடப்பட்டு, தரைத்தளம் பூர்த்தியான போது, அது 2012, ஜூன் மாதம் அது வடமேல் மாகாணசபை முதலமைச்சரின் பிரசன்னத்துடன் திறக்கப்பட்டது. மேல்மாடிக்கட்டத்தைப் பெற்றுக் கொள்வதில் பக்கபலமாக நின்ற மீள்குடியேற்ற அமைச்சின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட கிராம சேவகர் எம். வஹாரூன் அவர்களை நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். ஏ.ஏ.பாரிஸ் முகம்மத் 2012.09.30 வரை இப்பாடசாலையின் அதிபராக கடமையா ற்றினார். தொடர்ந்து S. M.M. றஸ்மி தற்காலிகத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று சொற்ப நாட்களில் A.K. நயிமுல்லாஹ் 2012.10.10 ஆந் திகதி அதிபராக பொறுப்பேற்றார். இவருடைய இடமாற்றம் வடமேல் மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் இரத்துச்செய்யப் பட்டதனால், மீண்டும் S.M.M. றஸ்மி 2012.10.10 தொடக்கம் பொறுப்பேற்றார். இவர் 2012.10.21 வரை தலைமையாசிரியராகக் கடமையாற்றினார்.
தற்போது முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் சமீரகம கிராமாத்தை வதிவிடமாகவும் கொண்ட ஜனாப். A.C. நஜூமுதீன் 2012.10.22 தொடக்கம் இப்பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது 885 மாணவர்கள் கல்வி கற்பதோடு, 36 ஆசிரியர்கள் கடமை கடமையாற்றுகின்றனர். சுத்தம் - ஒழுக்கம் கட்டுப்பாடு - கல்வி என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் A.C. நஜூமுத்தீன் அவர்களை பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பணியாற்றும் ஒருவராக நாம் காண்கின்றோம். அண்மைக்காலமாக விளையாட்டுத் துறையும் வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். I.M. இன்பாத் என்ற மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். விளையாட்டுத் துறையில் மாணவர்களை தேசிய மட்டம் வரைக்கும் பங்குபெறச் செய்வதில் உடற்கல்வி ஆசிரியர் N.L.M.A. அக்மல் அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. தமிழ்த்தின மற்றும் இஸ்லாமிய தின போட்டி நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்குபற்ற வேண்டும் என்பதிலும் அதிபர் உறுதியாக செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. 2014 தமிழ்த்தின நிகழ்வில் S. சஅத் என்ற மாணவன் "ஆக்கத்திறன் வெளிப்பாடு" நிகழ்ச்சியில் மாகாணத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்காக அர்ப்பணிப்போடு செயலாற்றிய ஆசிரியர்களான S.A.C. பர்சீன், S.M.காமிலா, ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, பாதையின் மேற்குப்புற நிலப்பரப்பையும், வகுப்பறைக் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் மாடிக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாடிக்கட்டிடத்தை பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்ட அதிபர் நஜூமுதீன் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் உள்ளூர் அரசியற் தலைமைகளின் அனுசரணையுடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக வடமேல் மாகாணசபை உறுபிப்பினர் N.T.M. தாஹிர், மற்றும் புத்தளத்தின் முன்னாள் நகரபிதா மர்ஹூம் K.A.பாயிஸ் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் மேல்மாடியில் மூன்று வகுப்பறைகள் முளைத்துள்ளதை காண முடிகின்றது. முன்னாள் அதிபர் A.A. பாரிஸ் ஆரம்பித்து வைத்த மாடிக்கட்டிட வேலைத்திட்டத்தை முழுமைப்படுத்தும் நோக்குடன் தமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதிபர் மாடிக்கட்டிடத்தின் ஏணிப்படிக்கருகில் சிறு அறையினை அமைத்திருப்பது, மாடிக்கட்டிடத் தொகுதியை தனியானதொரு ஆரம்பப் பிரிவாக உருவாக்குவதற்கான அவரது இலட்சியக் கனவாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

புத்தளத்தின் முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் மாடிக் கட்டிடத் தொகுதியை சூழ அமைக்கப்பட்டிருக்கும் மதிலும், கல்வியமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற எயாப் போட்நெட்வேலியும் தனியானதொரு ஆரம்பப் பிரிவினை அடையாளப்படுத்தும் வேலைத் திட்டங்களாகவே தெரிகின்றன. மாகாணசபை உறுப்பினர் S.A. யஹ்யாவின் நிதியொதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட பிரதான நுளைவாயில் உட்பட மாகாணசபை உறுப்பினர் பாலிதவினால் வழங்கப்பட்ட ஒலிபெருக்கி என்பன பௌதீகவள அபிவிருத்தியை பறைசாற்றி நிற்கின்றன. அதிபர் நஜூமுதீன் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளும், க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதைக் காண்கின்றோம். பாடசாலையின் 100 வருட வரலாற்றில் முதற்தடவையாக 2013 இல், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று ஜெ. உஸாமா மாவட்டத்தின் 4ம் நிலை, அதே வருடத்தில் க.பொ.த. (உ.த)ப் பரீட்சையில் H.H. அஸ்மரா, M. சன்பியாஸ் ஆகிய இரு மாணவிகளின் பல்கலைக்கழகப் பிரவேசம், 2014 இல் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 36 மாணவர்கள் தோற்றி 23 பேர் உயர்தரம் கற்பகற்கான தலைமையில் செயற்றிறன் மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் 5ஆம் தர புலமைப் பரிசில் தகைமையைப் பெற்றதுடன், M.H. இப்ராவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 7A,2B ஆகிய சாதனைகளை கலாசாலை பதிவு செய்துள்ளது.
புலவர் சேகு அலாவுத்தீன் வித்தியாலயம்
1992 இல் தேசிய மட்டத்த்திலான முஸ்லிம் கலாசார விழா கரைத்தீவில் நடைபெற்றது. இதன்போது கரைத்தீவில் தமிழ்மொழிமூலப் அரச பாடசாலையொன்று ஆரம்பிப்பதற்குக் காரணகர்த்தாவாக இருந்த கரைத்தீவுப் புலவரின் பெயர் பாடசாலைக்கு சூட்டப்பட வேண்டுமென முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த A.H.M. அஸ்வரினால் முன்மொழியப்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வந்த போதும், உரிய முறையில் அப்பெயர் பதிவுகள் செய்யப்படாததால், ஏற்கனவே உள்ள பதிவின் பிரகாரம் ஊர்மக்களின் விருப்பத்திற்குரிய “கரைத்தீவு முஸ்லிம் மாகா வித்தியாலயம்” என்ற பெயரே நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
5 ஆம் தரம் - புலமைப் பரிசில் பரீட்சை
“பெற்றோர் பரீட்சை” என இன்று வர்ணிக்கப்படுகின்ற 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில், 2014 வரை 28 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1974 இல் வரலாற்றில் முதற் தடவையாக அதிபர் ஏ.கே. ஜஃபர் அவர்களின் காலத்தில் ஆசிரியர் இஸட். தைய்யான் அவர்களின் வழிகாட்டலில் எம்.எம். வஹாரூன், 1981 இல் அதிபர் K.M. அஸீஸ் அவர்களின் காலத்தில் கே.எல்.எம்.எஸ்.ஹமீட் அவர்களின் வழிகாட்டலில் சீ.ஏ.ராஜன், 1991 இல் அதிபர் M.S.பரீனா அவர்களின் காலத்தில் ஆசிரியை ஏ.ஆர். மாசுன் நிஹார் மற்றும் ஆசிரியர் P.T.M. நிபால் ஆகியோரின் வழிகாட்டலில் ஏ.ஆர்.சிம்னாஸ், 1997 இல் அதிபர் M.M. ராசிக் அவர்களின் காலத்தில் ஆசிரியர் எச்.எம்.எம்.அஸ்ஹர் மற்றும் ஆசிரியர் P.T.M. நிபால் ஆகியோரின் வழிகாட்டலில் எஸ்.எம். அஸாம், எச். பௌமிதா ஆகியோர் சித்தியடைந்தனர்.
1997 இற்கு பின்னர் வெளியூர் திருமண உறவு காரணமாக உள்ளுர் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டியதாயிற்று. இதன் காரணமாக நிலவிய ஆசிரியர் பற்றாக் குறை காரணமாக, ஆசிரியர் பயிற்சிகுட்படாத மற்றும் தொண்டர் ஆசிரியர்களில் பாடசாலை தங்கி நின்ற வேளை, 2003 வரை தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் ஒருவர் கூட சித்திபெற முடியாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ஆசிரியர் பயிற்சியின் பின்னர் எச்.எச்.எம். நபீல் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலில் 2004 இல் P.M. ஸப்னா, என்ற மாணவி 131 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தார். அவரைத் தொடர்ந்து பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த ஆசிரியர் ஏ. அயாஸ்கான் அவர்களின் வழிகாட்டலில் 2008 இலிருந்து 2012 வரையுள்ள ஐந்து வருடங்களில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 2012 இல் இடம்பெற்ற இவரது இடமாற்றத்தின் பின்னர் 2013 இல் கனதிமிக்க இப்பணி ஆசிரியர் எச்.எச்.எம். நபீல் அவர்களின் தலைமையில் அதிபர் ஏ.சி. நஜூமுதீன் அவர்களின் வழிகாட்டலில் ஒரு கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்ட போது, பாடசாலையின் 100 வருட வரலாற்றில் முதற்முறையாக 180 புள்ளிகளைப் பெற்று, ஜெ. உஸாமா மாவட்டத்தின் 4 ஆம் நிலையைப் பெற்றுக் கொண்டதோடு, மொத்தமாக 4 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்.

2014 இல் அதுவரை இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் ஏ.எச்.எம். மூசீன் இடமாற்றம் பெற்று ஊர்ப்பாடசாலைக்கு வந்த சமயம் அப்பணியை சுமந்து கொண்டார். அவரின் கன்னி முயற்சியில் 03 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர். 2015 இல் இப்பாரிய பணியை ஆசிரியைகளான A.M.H. ஹஸீனா, A.C.S. றுஸ்கின், A.W. பர்தானா ஆகியோர் சுமந்து நிற்க, அதிபர் நஜூமுத்தீன் அவர்களின் தலைமையில் அது ஒரு கூட்டு முயற்சியாக மீண்டும் ஒரு முறை முன்னெடுக்கப்படுகின்றது.
"1982 - 1984 வரையுள்ள காலப்பகுதியில் என்னுடன் ஹமீட் மாஸ்டர், ஹாலித் மாஸ்டர் ஆகியோர் மாத்திரமே இருந்தனர். மூன்று ஆசிரியர்கள், மூன்று கட்டிடங்கள், முன்னூறு மாணவர்கள் என்ற நிலையிலேயே பாடசாலை காணப்பட்டது. "இக்காலப் பகுதியில் பாடசாலை மூடப்பட்டு விடாது பாதுகாப்பதைத் தவிர, வேறு எந்த சாதனைகளையும் எங்களால் செய்ய முடியவில்லை. இருந்தும் 1984, 1985 ஆம் ஆண்டுகளில் புதிதாக நியமனம் பெற்று வந்த ஆசிரியர்களான ஜெயந்தி, விக்னேஸ்வரி, அருளப்பு, ஜூலி, அருணாகரன், மூர்த்தி, நவ்பல், ஹில்மி, அன்சிலா, கலைச்செல்வி, றஹீம் ஆகியோரின் வருகை ஒரு சமூகக்கடமையை சுமந்துநின்ற எங்களுக்கு புதுதெம்பையும், புத்துணர்வையும், நம்பிக்கையையும் அளித்தது." என்றார் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.ஏ. அஸீஸ்.
நாம் புதிதாக நியமனம் பெற்று வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பதாகவே ஆசிரியர்களான ஜெயந்தி, விக்னேஸ்வரி, அருளப்பு, ஜூலி ஆகியோர் பாடசாலைக்கு வந்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அடித்தளங்களை இட்டு வைத்திருந்தனர். இது தொடர்ந்து புதியதொரு மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கு வசதியாக இருந்தது. நாம் முதலில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். பாடசாலைக்கு சமூகமளிக்காதிருந்த மாணவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று பாடசாலைக்கு வரச் செய்தோம். அவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். அவர்கள் 1986,1987 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. (சா.த)ப் பரீட்சைக்குத் தோற்றினார்கள்." என்றார் பாட இணைப்பாளர் திரு. வீ.அருணாகரன் அவர்கள்.
1978 இல் நடைபெற்ற அரசியல் மாற்றமும் அதன் விளைவாக நடைபெற்ற ஆசிரியர் இடம்மாற்றங்களும் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் கனிசமான பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. தொடர்ச்சியாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையுடன் சமூகத்தின் பொருளாதாரக் கஷ்டமும், பாடசாலையின் பௌதீகவளப் பற்றாக்குறையும், சமூகத்தின் ஒத்துழைப்பின்மையும், மாணவர்கள் ஊக்கிவிக்கப்படாமையும், சீரற்ற போக்குவரத்தும், விவேகமற்ற அரசியல் தலையீடும் இதன் விளைவாக 1982 இலிருந்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் க.பொ.த. (சா.த)ப் பரீட்சைக்கு கூட மாணவர்கள் தோற்ற முடியாமல் போனதை இங்கு ஈண்டு குறிப்பிட வேண்டியுள்ளது.
நவோதயா பாடசாலை
கிராமப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்னாள் கெளரவ ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரா நாயக்க அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நவோதயா பாடசாலைத் திட்டத்தின் கீழ் முழு இலங்கையிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 324 பாடசாலைகள் விசேட கவனத்திற்குரிய பாடசாலைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, வடமேல் மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 43 பாடசாலைகளில், புத்தளம் கல்வி வலயத்தின் ‘வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த எம்.எச்.எம் மஹ்ரூப் மரைக்கார் அவர்களின் சிபாரிசில் எமது பாடசாலையும் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது. விசேட கவனத்திற்குரிய இப்பாடசாலைகள் "நவோதயா பாடசாலைகள்” என அழைக்கப்பட்டன. இதன்மூலம் எமது பாடசாலை அதிகமான பௌதீக வளங்களை நேரடியாக மத்திய அரசிலிருந்து பெற்றுக் கொண்டது. இதனூடாக எமது பிரதேச மாணவர்கள் பயனடைந்து வருவதோடு, கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றது.
நூலகம்
1990 வரை பாடசாலையில் ஒரு நுலக வசதியிருந்ததாகத் தெரியவில்லை. 1990 இல் எம்.சீ. எம். மசூத் ஹாஜியாரின் மகன் நபீல் வழங்கிய ரூபா 2500 இற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டு, எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் கட்டிடத்தின் கிழக்குப் புறமாக அமைந்திருக்கம் சிறிய அறையில்தான் சிறியளவில் ஒரு நூலகம் அறிமுகம் செய்யப்பட்டது. 1992 இல் தேசிய மட்டத்திலான முஸ்லிம் கலாசார விழா கரைத்தீவில் நடைபெற்ற போது, முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் பாடசாலை நூலகத்திற்கென 30 × 20 அளவுள்ள கட்டிடமொன்றும், தளபாடங்களும் வழங்கப்பட்டன. இந்நூலகத்திற்கு “வரகவி செய்கு அலாவுதீன் நூலகம்" என பெயர் சூட்டப்பட்டது. இந்நூலகம் முஸ்லிம் சமய இராஜாங்க அமைச்சராக இருந்து செயற்பட்ட ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களினால் விசேட அதிதியாக அழைத்து வரப்பட்ட பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஹூசைன் ஹக்கானி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "நூலகமொன்று எல்லா வகையான நூற்களையும் கொண்டிருக்க வேண்டும்." என்ற சிந்தனையை சுமந்து நின்ற அதிபர் ஏ.எம். ஜவாத் தனது அயராக ஓட்டத்தின் மூலம் வேல்ட் விஷன் அமைப்பிலிருந்து ஜூன், 2006 இல் ரூபா 100,000 பெறுமதியான நுாற்களையும் ரூபா 100,000 பெறுமதியான நூலகத்திற்கான தளபாடங்களையும் பெற்றுக் கொள்ள வழி செய்தார். ஏ.எம். ஜவாத் அவர்கள் அதிபராக செயற்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் நவோதயா செயற்றிட்டத்தின் கீழ் எமது பாடசாலை 40 X 20 அளவிலான ஒரு நூலகத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நூலகம் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் S.A. யஹ்யா, S.H.M. நியாஸ் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் தேடலுக்கு இந்நுாலகம் இன்று பெரிதும் துணை நிற்கின்றது. இந்நூலகத்தை முறைப்படி ஒழுங்கமைத்து, கட்டிக்காப்பதில் பங்களிப்புச் செய்த ஆசிரியர்கள் பலர். அவர்களில் M. S. நவ்பில் ஆசிரியர் குறிப்பிடத்தக்கவர். இன்று மாணவர்களும் ஆசியர்களும் தங்களது பிறந்ததினப் பரிசாக, நுாலகத்திற்கு நுால் ஒன்று அன்பளிப்புச் செய்யும் முறையொன்று அதிபர் ஏ.சீ. நஜூமுதீன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், நூலகத்தை வளப்படுத்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் அவர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று ஆசிரியை A.G. ஜெஸ்மின் நுாலகத்தை வளப்படுத்துவதற்காக அர்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்.
கம்ப்யூட்டர் கற்கை நிலையம்
நவோதயா செயற்றிட்டத்தின் மூலம் கம்பியூட்டர் கற்கை நிலையம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பாடசாலை பெற்றபோது அது Three Phase மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அதனை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் அப்போது பிரதியமைச்சராக இருந்த கே.ஏ. பாயிஸ் Three Phase மின் இணைப்பினைப் பெற்றுத்தர துரித நடவடிக்கையினை மேற்கொண்டதை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். ரூபா 1,12,000 தேவையென மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கான முஸ்லிம் காங்கிஸ் கரைத்தீவு கிளை அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த மர்ஹூம் எம். இஸ்மயில் அவர்களின் சிபாரிசில் அவரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,000,00 உடன் பழைய மாணவர்களின் குறிப்பாக ATM.சுல்பிக்கார் மற்றும் AM. ஹூமாயூன் ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 12,000 ஐயும் பயன்படுத்தி இன்டர்நெட் வசதியுடன்கூடிய 23 கம்ப்யூட்டர்களும், தளபாடங்களும், குளிரூட்டிகள் அமையப் பெற்ற 30 X 20 அளவிலான கம்ப்யூட்டர் கற்கை நிலையம் ஏம்.எம். ஜவாத் அவர்கள் அதிபராக இருந்த 2007 ஆம் ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஒரு பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு கிடைத்த இவ்வரிய வளத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி பயன்பெறும் வகையில் திட்டமிட்டு செயலாற்றிய அன்று எமது IT ஆசிரியர் இன்று புத்தளம் - கல்வி வலயத்திற்கான IT உதவி கல்விப் பணிப்பாளர் M.A.M. அனீஸ் அவர்களை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
விஞ்ஞான கூடம்
1978,1979 காலப் பகுதியில் கற்பிட்டி M.H.M. கலீல், புத்தளம் - A.T. நஜீமா போன்றவர்கள் விஞ்ஞான ஆசிரியர்களாக இருந்த காலத்தில் தான் ஒரு விஞ்ஞான கூடமொன்று இவ்வாசிரியர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டது. அதற்கான தனியான ஒரு கட்டிடமும், மினி லெப் ஒன்றும் 1992ல் முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த அஸ்வரினால் வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் விஞ்ஞான ஆசிரியர் றிஸ்வி விஞ்ஞான கூடத்தை உயிரோட்டமிக்கதாக வைத்திருந்தார்.
தேசிய பாடசாலையாக தரம் உயர்வு
கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலயத்துக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து அரசின் "சுபீச்சத்தின் நோக்கு" இலக்கின் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இப் பாடசாலை - பு/கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் "தேசிய பாடசாலையாக உள்வாங்கப்பட்டிருப்பது தொடர்பான கல்வியமைச்சின் செயலாளரினால் அனுப்பப்பட்ட ED/01/06/01/28 - 2021 இலக்கம் கொண்ட 2021-05-17 திகதியிடப்பட்ட கடிதம் புத்தளம் வலயக்கல்வி பணிமனையினால் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பாடசாலை பாடசாலை 1994 இல் "நவோதயா" வேலைத்திட்டம் 2016 இல் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத்திட்டம் என்பவற்றில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு பாரிய வேலைத்திட்டங்கள் தவிர, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒதுக்கீடுகளில் இருந்தும் அன்று தொடக்கம் இன்று வரை அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
1913 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1997 இல் 1C பாடசாலை வகைக்குள் உள்வாங்கப்பட்டு "மகா வித்தியாலயம் " என்ற அந்தஸ்தைப் பெற்றது. இப்பாடசாலையின் மாணவர்கள் 1961 இருந்து சாதாரண தரப் பொதுப்பரீட்சைக்கும் 2000 ஆண்டு முதல் உயர்தரப் பொதுப்பரீட்சைக்கும் தொடர்ச்சியாக இன்று வரை தோற்றி வருகின்றனர். 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கரைத்தீவு - புலவர் வரகவி சேகு அலாவுதீனின் புலமைக்கு பரிசாக, ஆங்கில அரசு வழங்கிய புத்தளம் பிரதேசத்தின் தமிழ்மொழிமூல ஆரம்பகால அரச பாடசாலைகளில் ஒன்றான கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கட்டத்தில் "தேசிய பாடசாலை" என்ற அந்தஸ்து ஒரு மைற்கல் எனலாம். அன்று தொடக்கம் இன்று வரை பாடசாலையின் வளர்ச்சிக்காக அக்கறையுடன் செயற்பட்டுவரும் அனைத்து நல்லுள்ளங்களையும் நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளோம் என பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் கூறுகிறார்கள்.
"தேசிய பாடசாலை" என்ற அந்தஸ்து அண்மைக்காலமாக ஊரில் ஏற்பட்டுள்ள கல்வி எழுச்சிக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சேவையாற்றிய அதிபர்களும் அவர்கள் சேவையாற்றிய காலங்களும்.
பெயர் | இருந்து | வரை |
N. ஜோசப் அல்பிரட் | 02.06.1913 | 14.12.1917 |
E.B.டென்ஹாம் | 15.12.1917 | 13.12.1919 |
E.H.W. அன்டுவீல் | 16.01.1920 | 19.02.1920 |
S.S.J. வரதனம் | 20.02.1920 | 16.11.1924 |
பிரான்சிஸ் பெர்னாந்து | 01.01.1930 | 10.05.1940 |
C.J. சிவசம்பு | 06.11.1940 | 31.01.1950 |
பாக்கியம் | 01.02.1950 | 30.04.1951 |
A.S. நல்லையா | 01.05.1951 | 17.12.1953 |
S.N.J. ரத்னசாமி | 04.01.1954 | 30.06.1956 |
K.S. அலி | 01.07.1956 | 29.04.1957 |
S. தம்பு | 06.05.1957 | 17.01.1958 |
S. கப்ரியல்பிள்ளை | 18.01.1958 | 01.09.1958 |
U.L.M.அஷ்ரப் | 02.09.1958 | 28.12.1962 |
H.M. சேகுலாவுதீன் | 01.01.1963 | 31.01.1964 |
K.M.A. அஸீஸ் | 31.01.1964 | 10.03.1964 |
M.T.M. சஹாப்தீன் | 12.08.1964 | 16.03.1964 |
A.K.A. அனிபா | 31.08.1964 | 30.06.1968 |
A.L. ஹாலித் மரைக்கார் | 03.07.1968 | 01.09.1968 |
K.M.A. அஸீஸ் | 02.09.1968 | 15.05.1969 |
A.M.S. இப்றாஹீம் | 16.05.1969 | 15.06.1969 |
K.M.A. அஸீஸ் | 15.06.1969 | 30.06.1970 |
A.L. ஹாலித் மரைக்கார் | 30.06.1970 | 31.07.1971 |
A.K. ஜஃபர் | 01.08.1970 | 01.11.1977 |
A.L. ஹாலித் மரைக்கார் | 01.11.1977 | 27.01.1978 |
K.M.A. அஸீஸ் | 27.01.1978 | 09.07.1990 |
A.L. ஹாலித் மரைக்கார் | 09.07.1990 | 01.01.1991 |
M.S. பரீனா | 01.01.1991 | 02.05.1995 |
M.M. றாசிக் | 02.05.1995 | 26.11.1999 |
H.A.முஹ்தார் | 29.11.1999 | 02.05.2002 |
A.A. பாரீஸ் முகம்மத் | 03.05.2002 | 10.06.2002 |
AM. ஜவாத் | 10.06.2002 | 24.03.2009 |
A.A. பாரீஸ் முகம்மத் | 24.03.2009 | 01.10.2012 |
A.K.நயிமுல்லாஹ் | 01.10.2012 | 11.10.2012 |
S.M.M. றஸ்மி | 11.10.2012 | 22.10.2012 |
A.C. நஜுமுதீன் | 22.10.2012 | 26.10.2015 |
A.K.நயிமுல்லாஹ் | 26.10.2015 | இன்று |
Name list of Principals
தேசிய பாடசாலையாக தரம் உயரப்பட்டு இருக்கும் கரைத்தீவு முஸ்லீம் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)க்கு எமது இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இப் பாடசாலை மென்மேலும் வளர்ச்சியடைய எமது வாழ்த்துக்கள்.
மேலும் எங்களுக்கு இப்பாடசாலை பற்றிய தகவல்களை வழங்கிய தற்போதய அதிபர் A.K.நயிமுல்லாஹ் அவர்களுக்கும், பிரதி அதிபர் S.M.M. றஸ்மி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி.