லீவுகள்
01. அமைய லீவு / சமயோசித லீவு. (Casual Leave)
உள்நாட்டிலேயே கழிக்க கூடியதான ஒரே தடவையில் 6 நாட்களுக்கு கூடாமலும் வருடத்தில் 21 நாட்கள் உச்ச வரையறை கொண்டதான இந்த லீவு குறுகியகால தேவையின் நிமித்தம் கடமைக்கு சமாளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் பெறமுடியும். லீவு விண்ணப்பத்தில் லீவுக்கான காரணம் குறிப்பிடல் வேண்டும். ஆனால் சொந்த தேவை (Personal Matter) என்று குறிப்பிடக் கூடாது. அத்துடன் சுகவீன லீவு, அரைச்சம்பள லீவு, முழுச்சம்பள லீவு, ஓய்வு லீவு, பிரசவ லீவு என்பவற்றைப் போன்று தொடர்ந்து இந்த லீவைப் பெற முடியாது. இந்த லீவு காலத்தில் இடையில் வரக்கூடிய சனி, ஞாயிறு அரசு பொது விடுமுறை நாட்கள் கணக்கிடப்படமாட்டாது.
02. சுகவீன லீவு / பிணி லீவு. (Sick Leave)
ஆசிரியர்களுக்கு வருடத்தில் 20 நாட்கள் உச்ச வரையறையை கொண்டுதான் இந்த லீவை சுகவீன காரணங்களுக்காக பயன்படுத்த முடியும். 2 நாட்களுக்கு மேற்பட்ட லீவுக்காக வைத்திய அத்தாட்சி பத்திரம் சமர்பிக்க வேண்டும். சுகவீன காரணத்தினால் பெறப்பட்ட 6 நாட்கள் வரையிலான குறுகிய காலத்திற்குரிய லீவை அமைய லீவாக பெற்றுக்கொள்ளவும் முடியும். 14 நாட்களுக்கும் மேற்படாத சுகவீன லீவையே ஒரே தடவையில் வைத்தியர்கள் வைத்தியச் சான்றிதழ் சிபார்சு செய்ய முடியும். அதற்கு மேற்பட்ட நாட்கள் அரசு மருத்துவமனையில் பெறப்படுவதோடு ஒரு மாதம் கடந்த சுகவீன லீவு பற்றி அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்து அனுமதியை பெற வேண்டும். மேலும் ஒரு மாதம் கடந்துவிட்ட நீண்ட லீவுகள் மருத்துவச் சபை (Medical Board) மூலமே அனுமதிக்க முடியும் என்பதால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது பற்றி வலயக்கல்வி அலுவலகத்தில் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும்.
ஆசிரியர்களை தவிர கல்விசாரா ஊழியர்களுக்கு இந்த வகை சுகவீன லீவு தனியாக இல்லை.
03. அரைநாள் லீவு (Half day Leave)
ஆசிரியர்கள் அரைநாள் லீவு பெறுவதாயின் குறைந்தது பாடசாலை நடைபெறும் வேலை மணித்தியாலங்களில் அரைப்பகுதி அல்லது இரண்டரை மணித்தியாலங்கள் என்பவற்றில் எது கூடியதோ அந்த அளவு வேலை செய்ய வேண்டும். (க.அ.1981/13)
பிற்பகலில் மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தால் முற்பகலிலும் அரைநாள் லீவு பெறலாம். உதாரணம் - முஸ்லிம் பாடசாலைகள் 6.5 மணித்தியாலம் வேலை நேரமாக இருக்கும்போது பிற்பகலில் 3.45 மணித்தியாலங்களும், வெள்ளிக்கிழமைகளில் நான்கு மணித்தியாலமும் வேலை நேரமாக இருக்கும்போது 2.5 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டும்.
04. குறுகிய லீவு (Shot Leave)
ஒரு மணித்தியாலத்திற்கு மேற்படாமல் மாதமொன்றில் இரு தடவைகள் ஆசிரியர்கள் தமது சமயோகித தேவையின் பொருட்டு குறுகிய லீவை அதிபரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக விண்ணப்பப்படிவம் ஏதும் சமர்ப்பிக்க தேவையில்லை அதனால் லீவு பதிவேட்டில் நேரம் குறிப்பிட்டு அனுமதி பெற்ற பின்பே இந்த லீவைப் பெற வேண்டும். இது தொடர்பாக சம்பவத்திரட்டு புத்தகத்தில் பதிவு செய்வது அவசியமாகும். (க.அ.1981/13)
ஆசிரியர்களைத் தவிர கல்விசாரா ஊழியர்களுக்கு மாதத்தில் இரு தடவைகள் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேற்படாத குறுகிய (Short Leave) பெற முடியும்.
குறுகிய லீவுப் பதிவேடு
இப்பதிவேட்டில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்
1. ஆசிரியரின் பெயரும் தரவும்
2. லீவு கோரும் திகதி
3. லீவு தொடங்கும் நேரம்
4. லீவு முடிவடையும் நேரம்
5. லீவுக்கான காரணம்
6. உரிய ஆசிரியரின் கையொப்பம்
7. அனுமதிக்கும் அதிபரின் கையொப்பம்.
குறிப்பு : ஆசிரியர்களின் மேலே குறிப்பிட்ட அமைய லீவு, சுகவீன லீவு, அரைநாள் லீவு, குறுகிய லீவு என்பவை மட்டுமே பாடசாலை அதிபருக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் உண்டு. ஏனையவை லீவுகள் யாவும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அதிபரின் அனுமதியுடன் அனுப்பி வைத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட வகையான அதிபரின் அனுமதிக்காக கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேல் உள்ள ஆசிரியர்களின் லீவுகளை அனுமதி அளிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபருக்கு இருந்த போதிலும் கற்பித்தல் செயற்பாடுகளின் தேவையை கருத்தில் கொண்டு அவர் தமது ஆசிரியருக்கான சொந்த லீவை மறுக்க முடியும் அல்லது லீவு நாட்களை குறைத்து அனுமதிக்க முடியும். இருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில் அவர் கட்டாயமாக முடிவை அனுமதித்தே ஆக வேண்டிய நிலையும் உள்ளது. இவை அதிகாரத்திற்கு அப்பால் மனிதாபிமான முறையில் அணுக வேண்டிய சந்தர்ப்பங்கள் ஆகும் இவ்வாறான சந்தர்ப்பங்களில சில வருமாறு.
- நீதிமன்ற கட்டளையின் பேரில் நீதிமன்றம் செல்லல்.
- தனது தனிப்பட்ட பரீட்சைக்கு தோற்றுதல்
- தனது வாழ்க்கை துணையின் / பிள்ளைகளின் கடும் சுகவீனம்
- தனது குடும்பத்தவரின் விபத்து
- தனது குடும்பத்தவரின் மரணம்
- தனது வாழ்க்கை துணையின் / பிள்ளைகளின் சத்திரசிகிச்சை
- ஆபத்தில் / விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றச் செல்லல்.
- தனது திருமணம் / தனது பிள்ளைகளின் திருமணம்
- தனது நீண்டகால நோயின் நிமித்தம் சிகிச்சைக்காக சிகிச்சை நிலையம் கிளினிக் (Clinic) செல்லல்
- போக்குவரத்து சாதனம் இயங்காத நிலையில் சேவைக்கு சமூகமளிக்க இடையூறு இருத்தல்.
05. ஓய்வு லீவு (Vacation Leave)
ஆசிரியருக்கு பாடசாலை தவணை விடுமுறை காலத்தில் ஓய்வு லீவை அனுபவிக்க இயல்பாகவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு லீவை அவர்கள் வெளிநாட்டில் கழிக்க விரும்பினால் சம்பளத்துடன் கூடிய லீவாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக விண்ணப்ப படிவம் பொது126 ஆகும். கல்விசாரா ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 24 நாட்கள் உச்சவரையறையான ஓய்வு லீவு உண்டு.
ஆசிரியர்கள் பாடசாலை தவணை விடுமுறை காலத்தில் அவர்களுக்கு ஓய்வு உரித்துடையது என்பதனால் இந்த லீவைத் தொடர்ந்து அமைய லீவைப் பெற முடியாது. இதனால் பாடசாலை தவணை விடுமுறை முடிவுற்றவுடன் பாடசாலை தொடங்கிய முதல்நாள் லீவு பெற முடியாது என்பதை கவனத்திற் கொள்ளவும். (தா.கோ. XII-5:3)
06. புதிய நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான லீவு.
ஜனவரி மாதம் 1ஆம் திகதி நியமனம் பெற்ற ஒருவருக்கு அமைய லீவு 21 நாட்கள் அவ்வருடத்தில் பெற முடியும். ஆனால் வருடத்தில் இடைப்பட்ட காலத்தில் நியமனம் பெற்ற ஒருவர் அவ்வருடத்தில் எஞ்சிய காலத்தை கருத்தில்கொண்டு விகிதாசார எண்ணிக்கையில் தான் அமைய லீவைப் பெற முடியும்.
இவ்வாறு வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் நியமனம் கிடைக்கும்போது அவ்வருடத்தில் எஞ்சிய காலத்தை கருத்தில்கொண்டு விகிதாசார எண்ணிக்கையில்தான் சுகவீன அறிவைப் பெற முடியும்.தொடரும்.....📝🖊️
உதாரணமாக :
- 2019.09.20ஆம் திகதி புதிய நியமனத்தைப் பொறுப்பேற்ற ஆசிரியருக்கான சில சலுகைகள் பின்வருமாறு அமையும் -
- இவ்வருட சேவைக்காலம் (2019.09.20 முதல் 2019.12.31 வரை) = 103 நாட்கள்
- இவ்வருட நிதியாண்டின் நாட்களின் எண்ணிக்கை = 365
- பெறக்கூடிய அமைய லீவுகளின் எண்ணிக்கை = 21/365 x 103 = 6 (கிட்டிய)
- பெறக்கூடிய சுகவீன லீவுகளின் எண்ணிக்கை = 20/365 x 103 = 5 1/2(கிட்டிய)
- சலுகைகள் யாவும் தாபன விதிக்கோவை, சுற்றுநிருபங்களின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாக அமைவதோடு தாபன விதிக்கோவை பதிவுகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தாபனப் பணிப்பாளருக்குண்டு.