Type Here to Get Search Results !

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைவாக ஆசிரியர்களின் வினைத்திறன் தடை தாண்டல். (EB)

வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை தொடர்பான முழு விபரங்கள்

இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள குறிப்பிட்ட தரங்களை உடையவர்களுக்கு வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை முக்கியமானதாக காணப்படுகிறது. அவற்றை தொகுத்து எந்த தரங்களுக்கு எப்படி எப்பொழுது செய்யவேண்டும் என்பதை நாங்கள் விளக்கமாகவும் தெளிவாகவும் தொடர்ச்சியாக வழங்க இருக்கிறோம்.

ஆசிரியர்களின் பதவி உயர்வும் வினைத்திறன் தடை தாண்டலும்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1885/38 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பு 09 இல் கீழ் உள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வின் போது உரிய தினத்திற்கு வினைத்திறன் தடை தாண்டலில் சித்தியடையாத உத்தியோகத்தின் பதவி உயர்வு தினம் வினைத்திறன் தடைதாண்டலில் சித்தி அடைவதற்கு தாமதமான காலத்திற்கு சமமான காலத்தினால் தாமதிக்கச் செய்ய வேண்டும்.

கல்வி அமைச்சின் செயலாளரின் ED/02/29/02/0206 இலக்கம் 2020.12.09 திகதியுடைய கடிதத்துக்கு அமைவாக, இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு I இற்கு மேல் அடுத்த பதவி உயர்வு இல்லாத காரணத்தால் 2019.10.23ஆம் திகதி முதல் 2020.10.22 ஆம் திகதி வரை இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்டவர்களுக்கு வருடாந்த சம்பள ஏற்றம் தொடர்ந்தும் வழங்கப்படல் வேண்டும்.

2019.10.23ஆம் திகதி தொடக்கம் 2020.10.22 ஆம் திகதி வரை நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கபட்டவர்களுக்கு 2020.10.23 ஆம் திகதியிலிருந்து 2021.10.22 ஆம் திகதி வரை இலங்கை ஆசிரியர் சேவையில் உரிய வகுப்புகளுக்கான பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் 2021.10.22 ஆம் திகதிக்கு முன்னர் வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

குறிப்பு : 2019.10.23 அன்று அல்லது அதன் பின் பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வைப் பெற்றுக் கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் வலயத்திற்குரிய ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பதவிக்குரிய வினைத்திறன் தடைதாண்டல் மொடியூள்களை பூர்த்தி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் தொடர்பான தாமதங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

கல்வி அமைச்சின் செயலாளரின் ED/03/20/04/08/07 இலக்க 2020.12.17 கடிதத்திற்கு அமைவாக, ஆசிரியர்களின் தடைதாண்டல் பரீட்சைக்குரிய மொடியூள் செயற்திட்டம் நிகழ்நிலை (Online) முறையை பின்பற்றி நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வினைத்திறன் காண் தடைதாண்டலின் போது சித்தியடைய வேண்டிய மொடயூல்களின் விபரங்கள்.

3-I (அ), 3-I (ஆ), இல் இருந்து 2-II பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 01 தொடக்கம் 07 வரை.

மொடியூள் 01 - தாபன விதிக்கோவையில் ஆசிரியருக்குரிய அடிப்படை விடயங்கள் மற்றும் அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரினால் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் மற்றும் நிதி கோவைகளின் பாட உள்ளடக்கம்.

மொடியூள் 02 - ஆசிரியர்களின் விழுமியங்கள்.

மொடியூள் 03 - வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவர்களை இனங்காணுதல்.

மொடியூள் 04 - தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவ பண்புகள், முன்வைத்தல் தொடர்பான பொறிமுறை நுட்பங்கள்.

மொடியூள் 05 - நாட்குறிப்பில் வார குறிப்புகள், தவணை குறிப்புகளைத் தயாரித்தல் மற்றும் பேணல்.

மொடியூள் 06 - ஆக்கத்திறன் மற்றும் தர நுட்ப முறைமைகள்.

மொடியூள் 07 - கல்விக்கான தகவல் தொழில்நுட்பம்.

2-II இல் இருந்து 2-I இற்கு பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 08 தொடக்கம் 14 வரை

மொடியூள் 08 - கல்வியுடன் தொடர்புபட்ட கட்டளைச் சட்டங்கள் மற்றும் கல்வி வரலாறு.

மொடியூள் 09 - ஆங்கில பயன்பாடுகள்.

மொடியூள் 10 - பாட இணைச் செயல்பாடுகள் மற்றும் பாடசாலைச் செயற்றிட்டம்.

மொடியூள் 11 - அலுவலக முறை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புசாதன இணைப்புகளை நடத்தி பின்பற்ற வேண்டிய செயற்பாட்டு முறைகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களை எடுத்தல்.

மொடியூள் 12 - சிறுவர் சுகாதார மற்றும் போசாக்கு.

மொடியூள் 13 - விளையாட்டு மற்றும் உடற்கல்வி அறிவு.

மொடியூள் 14 - மனோவியல் ஆலோசனை.

2-I இல் இருந்து I இற்கு பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 15 தொடக்கம் 20 வரை

மொடியூள் 15 - கல்வித்துறையில் காணப்படும் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு மற்றும் அதற்கான தொடர்புகளை பேணல் உயர்கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி.

மொடியூள் 16 - ஆராய்ச்சி மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி முறைகள்.

மொடியூள் 17 - நபர்களுக்கிடையிலான இணைப்புகள் மற்றும் சிந்தனைத்திறன் அபிவிருத்தி.

மொடியூள் 18 - மனிதவள முகாமைத்துவம்.

மொடியூள் 19 - முறைசாராக் கல்வி மற்றும் மென்பொருள் திறமை.

மொடியூள் 20 - நேர முகாமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை.

ஆசிரியர்களின் பதவி உயர்வு காலம் இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக

ஆசிரியர் ஒருவர் இலங்கை ஆசிரியர் சேவையின் 2 வகுப்பின் I ம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற பின் கல்வி, தொழில் தகமையை பெற்றிருப்பின் அவரின் பதவி உயர்வு காலங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது.

அனைத்து ஆசிரியர்களும் இலங்கை ஆசிரியர் சேவை எண் 2 வகுப்பில் I ம் தரத்திலிருந்து இலங்கை ஆசிரியர் சேவையின் 1 ஆம் வகுப்பிற்கு பதவி உயர்வு பெற 06 வருடங்கள் ஆகும்.

ஆசிரியர் ஒருவர் பட்டம், பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்விமாணி, கல்வி முதுமாணி ஆகிய கல்வி தொழில் தகைமைகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 வகுப்பின் II ம் தரத்தில் (05, 07 வருட) காலப்பகுதிக்குள் அல்லது முன் பூர்த்தி செய்தால் மட்டுமே பதவி உயர்வு காலங்களில் மாற்றம் ஏற்படும்.

மேற்கூறப்பட்ட மேலதிக தகைமையைப் பெற்றுக் கொள்ளாது அல்லது ஆசிரியர் பயிற்சியை மட்டும் பெற்றுக் கொண்டவர்கள் 2-II ம் வகுப்பு தரத்தில் இருந்து 2-I ம் வகுப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற 09 வருடங்கள் செல்லும்.

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பும், பதவி உயர்வில் இரட்டைச் சலுகை தொடர்பான விளக்கமும்

கல்விமாணி பட்டத்தகைமை

கல்விமாணி பட்டத் தகைமையைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் சேவையில் 2 ஆம் வகுப்பில் II ம் தரத்திற்கு நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர்கள். அந்த தரத்தின் சம்பள அளவுத்திட்டத்தின் 3 ஆவது படி முறையில் அமர்த்தப்படுவர். 2 ஆம் வகுப்பில் II ஆம் தரத்தில் இருந்து 2 ம் வகுப்பில் I தரத்திற்கு 07 வருடங்களில் பதவி உயர்வு பெறலாம்.

பட்டதாரி தகைமை

பட்டதாரி தகைமை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (அ) இல் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்கள், பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா தகைமையை பெற்றுக் கொள்ளுமிடத்து, தரம் 2-II இற்கு நியமிக்கப்படுவார்கள். 2ஆம் வகுப்பில் II ம் தரத்திலிருந்து 2 ஆம் வகுப்பில் I ஆம் தரத்திற்கு 07 வருடங்களில் பதவி உயர்வு பெறலாம்.

இலங்கை ஆசிரியர் சேவை 3-I (அ) தரத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் / போதனாவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் தங்களது பட்டத் தகைமையை அல்லது கல்விமாணி பட்ட தகைமையைப் பெற்றுக் கொள்ளுமிடத்து தரம் 2-II இற்கு நியமிக்கப்படுவார்கள். அந்த தரத்தின் சம்பள அளவு திட்டத்தின் 03 வது படிமுறையில் அமர்த்தப்படுவர். 2ம் வகுப்பில் II ம் தரத்திலிருந்து 2ம் வகுப்பில் I தரத்திற்கு 07 வருடங்களில் பதவி உயர்வு பெறலாம்.

தொடரும்.....📝🖊️   

 Next »

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.